பா.ஜ.க. எம்.பி., கொரோனாவுக்கு பலி - பிரதமர் மோடி இரங்கல்

பா.ஜ.க. எம்.பி., நந்தகுமார் சிங் சவுகான், கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2021-03-03 02:01 GMT
போபால்,

மத்திய பிரதேச மாநிலம், காண்ட்வா தொகுதி பா.ஜ.க. எம்.பி.யாக பதவி வகித்து வந்தவர், நந்தகுமார் சிங் சவுகான் (வயது 68).

இவர் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். டெல்லி மேதாந்தா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவருடைய உடல்நிலை மோசம் அடைந்ததால் கடந்த சில நாட்களாக வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நந்தகுமார் சிங் சவுகான் நேற்று காலையில் மரணம் அடைந்தார்.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “காண்ட்வா தொகுதி மக்களவை எம்.பி. நந்தகுமார் சிங் சவுகான் மறைவால் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். நாடாளுமன்ற செயல்பாடுகளுக்காகவும், அமைப்பு ரீதியிலான திறன்களுக்காகவும், மத்திய பிரதேசத்தில் கட்சியை பலப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் அவர் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறி உள்ளார்.

மறைந்த நந்தகுமார் சிங் சவுகான், 2018, ஏப்ரல் 18-ந் தேதி வரையில் மாநில பா.ஜ.க. தலைவர் பதவியும் வகித்தவர், 6 முறை மக்களவை எம்.பி. யாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு துர்கேஸ்ரீ என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்