பீகாரில் அரசு விழாவில் மந்திரிக்கு பதிலாக சகோதரர் பங்கேற்றதால் சர்ச்சை

பீகாரில் அரசு விழாவில் மந்திரிக்கு பதிலாக அவரது சகோதரர் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-03-05 23:34 GMT
பாட்னா,

பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் பா.ஜ.க., ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு விகாஷீல் இன்சான் கட்சியை சேர்ந்த முகேஷ் சஹானி என்பவர் கால்நடை பராமரிப்புத்துறை மந்திரியாக உள்ளார்.

இந்த நிலையில், அங்கு ஹாஜிப்பூர் என்ற இடத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அரசு விழா ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் மந்திரி முகேஷ் சஹானிக்கு பதிலாக அவரது சகோதரர், அரசு காரில் வந்து, தலைமை விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார்.

இந்த விவகாரம், அங்குள்ள பத்திரிகைகளில் செய்தியாக வெளியாகி சர்ச்சையாகி உள்ளது. இதுகுறித்த பிரச்சினையை அந்த மாநில சட்டசபையில் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதாதளத்தின் உறுப்பினர்கள் நேற்று எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது முதல்-மந்திரி நிதிஷ்குமார் எழுந்து, “தற்போது தான் இந்த சம்பவம் பற்றி எனக்கு தெரிய வந்துள்ளது. இது குறித்து எனக்கு தெரியாது. இது தொடர்பாக பத்திரிகைகளில் வந்த செய்தி பற்றி உறுப்பினர்கள் தெரிவித்தனர். இது குறித்து மந்திரியிடம் விசாரணை நடத்துவேன்” என உறுதி அளித்தார்.

அதன்பின்னர், சட்டசபையில் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.

மேலும் செய்திகள்