தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தல் வழக்கு: கனிமொழியின் மேல்முறையீட்டு மனு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தள்ளிவைப்பு

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. ஆனார். இவரது வெற்றியை எதிர்த்து அந்த தொகுதி வாக்காளர் சந்தானகுமார் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

Update: 2021-03-18 13:56 GMT
இந்த வழக்கை நிராகரிக்க மறுத்த ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக கனிமொழி கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த ஆண்டு (2020) ஜனவரி 30-ந்தேதி இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்புக்கும், விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்தது.

இந்தநிலையில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை ஏன் தடுக்க வேண்டும் என கேட்டனர். இதற்கு கனிமொழி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி. வில்சன், ‘நாங்கள் விசாரணையை தடுக்கவில்லை, கனிமொழியின் கணவர் வெளிநாட்டு குடிமகன் என்பதால் பான் கார்டு எண் இல்லை, அதை வேட்பு மனுவில் குறிப்பிடப்படவில்லை எனக் கூறி வழக்கு தொடரப்பட்டது, ஆனால், வேட்பு மனுவில் அதை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் இந்த வழக்கில் இதுவரை 38 எதிர்மனுதாரர்களில் 32 பேர் பதில் அளித்துள்ளனர்’ என்று தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதிகள், ‘கணவர் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்பது தேர்தல் செயல்பாட்டை பாதிக்காது’ என தெரிவித்ததுடன், இந்த வழக்கில் அனைத்து எதிர்மனுதாரர்களும் பதிலளித்த பின்னர் வழக்கு மேற்கொண்டு விசாரிக்கப்படும் என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்