இடதுசாரி மற்றும் காங்கிரஸ் அரசுகள் கேரள மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளன - யோகி ஆதித்யநாத் பேச்சு

இடதுசாரி அரசும், காங்கிரஸ் அரசும் கேரள மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் உ.பி. முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

Update: 2021-04-01 09:02 GMT
திருவனந்தபுரம், 

140 தொகுதிகளை கொண்ட கேரள சட்டசபைக்கு ஏப்ரல் 6-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. கேரளாவில் இடதுசாரிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், வரும் சட்டசபை தேர்தலில் அம்மாநிலத்தில் இடதுசாரிகளின் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி, காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி மற்றும் பாஜக கூட்டணிகளுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்ற கட்சிகள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், கேரள அரசியலில் உச்சபட்ச பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உத்தரபிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் கேரளாவின் பத்தனந்திட்டாவில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். 

பிரசாரத்தின்போது உ.பி. முதல்மந்திரி யோகி பேசுகையில், ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணிக்கும், இடது ஜனநாயக முன்னணி கூட்டணிக்கும் கேரள மக்கள் கால காலமாக ஆதரவு அளித்து வந்தனர். ஆனால், அந்த இரண்டு கூட்டணிகளும் கேரள மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டன. அதற்கு பழிதீர்க்கும் வகையாக தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிபெறவைக்க நேரம் வந்துவிட்டது.

காங்கிரஸ் - எம்.யூ கூட்டணி என்பது கேரளாவின் பாதுகாப்புக்கு துரோகம் இழைப்பதாகும். அதேபோல், பி.எஃப்.ஐ - எஸ்.டி.பி.ஐ உடன் இணைந்து இடது ஜனநாயக முன்னணி கேரளவுக்கு துரோகம் இழைத்துவிட்டது. தற்போது இங்கு நடைபெற்றுவரும் சில சம்பவங்கள் நாளை கேரளாவுக்கு ஆபத்தாகும் என்பது நம் பக்கம் கவனத்தை ஈர்த்துள்ளன.

பி.எஃப்.ஐ - எஸ்.டி.பி.ஐ-யின் நடவடிக்கைகள் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இத்தகையவற்றின் மீது இடது ஜனநாயக முன்னணியின் மென்மை போக்கு கேரளாவின் பாதுகாப்பிற்கும் இளைஞர்களின் எதிர்காலத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது’ என்றார்.          

மேலும் செய்திகள்