கொரோனா பரவல் அதிகரிப்பு: மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

Update: 2021-04-08 14:07 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 26 ஆயிரத்து 789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 685- பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக, மராட்டியம், பஞ்சாப், தமிழகம் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், மற்றும் டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இதையடுத்து முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், தடுப்பூசி போடுவது குறித்தும் மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி தற்போது காணொலி காட்சி மூலம் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். 

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்மந்திரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தமிழகம் சார்பில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பங்கேற்றுள்ளார்.   

இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு பின்னர் மாநிலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதது, ஊரடங்கு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை துரித்தப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக்கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

மேலும் செய்திகள்