கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்கள் பங்களிப்பு அவசியம்; புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தல்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தினார்.

Update: 2021-04-12 04:25 GMT

தடுப்பூசி திருவிழா

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.புதுவை முழுவதும் நேற்று முதல் வருகிற 14-ந் தேதி வரை 100 இடங்களில் கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, பாக்கமுடையான்பட்டு அரசு தொடக்கப்பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி திருவிழாவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

வரவேற்பு

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் புதுவையில் 100 இடங்களில் கொரோனா தடுப்பூசி திருவிழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற நம்பிக்கையோடு வந்து பொதுமக்கள் தடுப்பூசியை போட்டு செல்கின்றனர்.

தொற்று பரவுவதை தடுக்க சிறிய அளவிலான கட்டுப்பாட்டு மண்டலங்களை உருவாக்கி, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயன்பெறும் அளவில் சிறப்பான முறையில் தடுப்பூசி திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணியில் அனைத்துதுறை அதிகாரிகளும், ஊழியர்களும் களத்தில் உள்ளனர். மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அரசு கட்டுப்பாடு விதிப்பதை விட, மக்களே கட்டுப்பாடாக இருக்க வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டைவிட்டு வெளியே வரக் கூடாது. அவர்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இதையும் மீறி வெளியே வருபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.

பொதுமக்களின் பங்களிப்பு

கொரோனா தடுப்பு பணியில் அரசால் மட்டும் எதையும் செய்து விட முடியாது. பொதுமக்களின் பங்களிப்பும் மிகவும் அவசியம். தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு தனியாக படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கவர்னரின் ஆலோசகர் சந்திரமவுலி, சுகாதாரத்துறை செயலர் அருண், கல்வித்துறை செயலர் அசோக்குமார், புதுச்சேரி மாநில சுகாதார திட்ட இயக்குனர் ஸ்ரீராமலு மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்