மேற்கு வங்காள 4 கட்ட தேர்தல்களிலும் மக்கள் மம்தாஜியை கிளீன் போல்டாக்கி விட்டனர்: பிரதமர் மோடி பேச்சு

மேற்கு வங்காள சட்டசபைக்கான 4 கட்ட தேர்தலில் பா.ஜ.க. சதம் அடித்து உள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Update: 2021-04-12 08:39 GMT
வர்தமான்,

மேற்கு வங்காள சட்டசபைக்கான தேர்தல் 8 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.  மொத்தம் 45 சட்டசபை தொகுதிகளுக்கான 5வது கட்ட தேர்தல் வருகிற 17ந்தேதி நடைபெற உள்ளது.

இதற்கான தேர்தல் பிரசார பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.  இதேபோன்று பா.ஜ.க. சார்பில் வாக்குகளை சேகரிக்க பிரதமர் மோடி இன்று வர்தமான் நகருக்கு வருகை தந்துள்ளார்.

அவர் பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு மக்களிடையே உரையாற்றினார்.  அவர் பேசும்பொழுது, மம்தாஜிக்கு இவ்வளவு கசப்புணர்வு எங்கிருந்து வந்தது என்பது எனக்கு ஆச்சரியமளிக்கிறது.  தீதிக்கு கோபம், கசப்புணர்வு மற்றும் ஏமாற்றம் அதிகரித்து வருகிறது.

ஏனெனில், கடந்த 4 கட்ட தேர்தல்களிலும் மக்கள் திரிணாமுல் காங்கிரசை துடைத்தெறிந்து விட்டனர்.  வங்காள மக்கள் பவுண்டரிகளும், சிக்சரும் அடித்து விளாசி விட்டனர்.  இதனால் பா.ஜ.க. முன்பே சதம் அடித்து விட்டது.

உங்களிடம் (மக்கள்) விளையாட விரும்பிய அவர்களிடம், மக்கள் விளையாடி விட்டனர்.  நந்திகிராம் மற்றும் வங்காள மக்கள் தீதியை கிளீன் போல்டாக்கி விட்டனர்.  மருமகனுக்கு கட்சியின் தலைமையை ஒப்படைக்க அவர் தயாரானார்.  ஆனால் மக்கள் சரியான நேரத்தில் அவரது விளையாட்டை தடுத்து நிறுத்தி விட்டனர்.

காங்கிரசும், இடதுசாரியும் வெளியேறிய பின் அதிகாரத்திற்கு திரும்பி வரவேயில்லை என்பது தீதிக்கு தெரியும்.  தீதி, நீங்களும் வெளியேறிய பின்பு திரும்ப அதிகாரத்திற்கு வரப்போவதே இல்லை.  திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைய போகிறது என அவர் பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்