கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த ஆலோசனை வருகிற 18, 19-ந் தேதிகளில் கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் - முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்

கர்நாடகத்தில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் மேலும் தீவிரமாக்கப்படும் என்றும், இதுபற்றி விவாதிக்க வருகிற 18, 19-ந் தேதிகளில் கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த இருப்பதாகவும் முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

Update: 2021-04-13 04:30 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கர்நாடகத்தில் இதுவரை 10 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2-வது அலை காரணமாக கடந்த 15 நாட்களாக கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. இதனால் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று நிலவரப்படி சுமார் 72 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதனால் பெங்களூரு உள்பட 8 நகரங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கர்நாடக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா பீதர் மாவட்டம பசவகல்யாண் தொகுதி பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்தார். முன்னதாக அவர் பீதரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். இதனால் இடைத்தேர்தல் முடிவடைந்ததும், கர்நாடகத்தில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் மேலும் தீவிரமாக்கப்படும். பிரதமர் மோடி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 5 நிமிடங்கள் பேசி, கொரோனா பரவலை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து விவரங்களை கேட்டு பெற்றார். வைரஸ் தொற்றை தடுக்க தீவிரமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

தலைநகர் பெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இது எந்த அளவுக்கு ஆக்கப்பூர்வமாக உள்ளது என்பதை பார்க்க வேண்டியுள்ளது. அதன் பிறகு அப்போது நிலவும் நிலைமையை பொறுத்து மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இன்னும் ஒரு வாரம் பொறுத்திருந்து பார்ப்போம். அதற்குள் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கினால், புதிதாக வேறு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.

ஒருவேளை கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்தால் ஏதாவது ஒரு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை வரும். தேர்தல் நேரமோ அல்லது பண்டிகை நேரமோ பொதுமக்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, சானிடைசர் மூலம் கைகளை அவ்வப்போது தூய்மையாக்குவது போன்ற நடவடிக்கையை மேற்கொண்டால் கொரோனா பரவாது.

ஆனால் சிலர் அலட்சிய போக்குடன் உள்ளனர். அவர்கள், அத்தகைய மனநிலையில் இருந்து வெளியே வர வேண்டும். கொரோனா தடுப்பு நிபுணர் குழு வழங்கும் அறிக்கையில் கூறும் அம்சங்களை ஆராய்வோம். எத்தகைய முடிவை எடுப்பதாக இருந்தாலும், அதுபற்றி ஆழமாக ஆலோசிப்போம். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டே அரசு முடிவு எடுக்கும்.

பொதுமக்கள் ஏற்கனவே நெருக்கடியில் உள்ளனர். இதற்கிடையே தற்போது கொரோனா பரவுகிறது. எந்த நிலையிலும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசிக்கவில்லை. பொதுமக்கள் தங்களின் பொருளாதார நிலைக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்று நினைத்தால் கொரோனா தடுப்பு விதிமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும்.

கர்நாடகத்தில் சில பகுதிகளில் அமலில் உள்ள இரவு நேர ஊரடங்கை மேலும் சில நகரங்களுக்கு விஸ்தரிக்க திட்டமிட்டுள்ளோம். முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக இருந்தால் அனைத்துக்கட்சி தலைவர்களின் ஆலோசனையை கேட்டு பெற்று முடிவு எடுக்கப்படும். இதற்காக அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் வருகிற 18,19-ந் தேதிகளில் பெங்களூருவில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் எனது தனிப்பட்ட விருப்பம் எதுவும் இல்லை. பொதுமக்களுக்கு நல்லது நடைபெறுவதாக இருந்தால் ஊரடங்கை அமல்படுத்த தயாராக உள்ளோம்.

இந்த விஷயத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வேன். பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் எதையும் செய்ய முடியாது. மராட்டியத்தில் நிலவும் நிலையை கர்நாடகத்தில் ஏற்படுத்தும் வகையில் மக்கள் நடந்துகொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்