இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40.04 லட்சம் டோஸ் தடுப்பூசிகள்; மத்திய அரசு தகவல்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40.04 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

Update: 2021-04-13 05:51 GMT
புதுடெல்லி,

நாட்டில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை லட்சக்கணக்கில் உச்சம் தொட்டு வருகிறது.  கடந்த 7 நாட்களாக 1 லட்சம் என்ற எண்ணிக்கையை பாதிப்புகள் கடந்துள்ளன.  கொரோனா பாதிப்புகளை தடுக்க இந்தியாவில் அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளை பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதன்படி, கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் நாட்டில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.  உள்நாட்டில் உற்பத்தியான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகியவை இதற்கு அனுமதி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40.04 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.  கடந்த 11ந்தேதி தடுப்பூசி திருவிழா தொடங்கியது.  இதனை முன்னிட்டு நாட்டு மக்கள் 4 முக்கிய விசயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டு கொண்டார்.  தடுப்பூசி போட செல்லும் மக்களுக்கு தேவையான உதவியை செய்யுங்கள்.  கொரோனா சிகிச்சை பெறுவதற்கு உதவி செய்யுங்கள்.

முக கவசம் அணிந்து செல்லுங்கள்.  மற்றவர்களையும் அணியும்படி ஊக்கப்படுத்துங்கள்.  யாருக்கேனும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அந்த பகுதியில் சிறிய அளவிலான கட்டுப்பாட்டு மண்டல பகுதியை உருவாக்குங்கள் என கூறினார்.

இந்நிலையில், தடுப்பூசி திருவிழாவின் 3வது நாளான இன்று வரை மொத்தம் 10 கோடியே 85 லட்சத்து 33 ஆயிரத்து 85 தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40.04 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்