கோவாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது - முதல்வர் பிரமோத் சாவந்த் தகவல்

கொரோனா அதிகரித்து வரும் நிலையில், கோவாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-14 10:47 GMT
பனாஜி,

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் பதிவாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இந்நிலையில் கோவாவில் தினமும் 500-க்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. கோவாவில் கொரோனா பரவல் நன்கு கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது பரவி வரும் 2வது அலையால், அங்கு மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக கோவாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், இது குறித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

“கோவாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அனைவரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். தற்போதைய சூழலில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பொருளாதார நடவடிக்கைகளை நிறுத்த முடியாது. ஆகையால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்