நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்குகளில் அரசு தரப்பு வக்கீல்கள் நியமனம்; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றதாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.

Update: 2021-04-16 17:12 GMT

மத்தியில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றதாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. அதையடுத்து நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட்டன.

மேலும் நிலக்கரி முறைகேடு வழக்குகளை விசாரிப்பதற்கு 2 சிறப்பு கோர்ட்டுகளை அமைத்து, அருண் பரத்வாஜ், சஞ்சய் பன்சால் ஆகிய இருவரையும் சிறப்பு நீதிபதிகளாக நியமித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்குகளில் ஆஜராக அரசு தரப்பு சிறப்பு வக்கீலாக நியமிக்கப்பட்ட ஆர்.எஸ்.சீமா, வயது, ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக அப்பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு கோரியிருந்தார்.

அதையடுத்து, அரசு தரப்பு சிறப்பு வக்கீல் நியமனம் தொடர்பாக அமலாக்கத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு விசாரித்தது. பின்னர் அந்த அமர்வு பிறப்பித்த உத்தரவில், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்குகளில் அரசு தரப்பு வக்கீல்களாக முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மனீந்தர் சிங், வக்கீல் ராஜேஷ் ஆகியோரை நியமிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்