மே 2-ந்தேதி முன்னாள் முதல்-மந்திரி ஆகிவிடுவார், மம்தா பானர்ஜி - பிரதமர் மோடி சொல்கிறார்

மே 2-ந்தேதி, மம்தா பானர்ஜி முன்னாள் முதல்-மந்திரி ஆகிவிடுவார் என்று பிரதமர் மோடி கூறினார்.

Update: 2021-04-18 01:03 GMT
அசன்சோல், 

மேற்கு வங்காள மாநில சட்டசபை தேர்தலையொட்டி, அசன்சோல் நகரில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

வங்காள புத்தாண்டுக்கு பிறகு இதுதான் எனது முதல் பொதுக்கூட்டம். 4 கட்ட தேர்தல்கள் முடிந்தநிலையில், திரிணாமுல் காங்கிரஸ் பயந்து போயுள்ளது. பிணங்களை வைத்து மம்தா பானர்ஜி அரசியல் நடத்துகிறார். மே 2-ந்தேதி, மம்தா பானர்ஜி, ‘முன்னாள் முதல்-மந்திரி’ என்ற சான்றிதழை பெற்று விடுவார்.

உங்கள் ஓட்டு, திரிணாமுல் காங்கிரசை ஆட்சியில் இருந்து இறக்குவதுடன், மாபியா ராஜ்யத்தையும் நீக்கி விடும். அதுதான் உங்கள் ஓட்டின் வலிமை.

மேற்கு வங்காளத்துக்கு தேவை இரட்டை என்ஜின் அரசுதான். வளர்ச்சியை தடுக்கும் அரசு அல்ல. கடந்த 10 ஆண்டுகளாக, வளர்ச்சியை தடுத்து அவர் துரோகம் செய்துள்ளார்.

மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கும், மேற்கு வங்காள மக்களுக்கும் இடையே அவர் சுவர் போல் நின்று கொண்டார். இதனால், மக்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்களை பறித்துக்கொண்டார்.

மக்களுக்கு ரூ.5 லட்சம்வரை இலவச மருத்துவ காப்பீட்டை அளிக்க மத்திய அரசு முன்வந்தது. ஆனால், மம்தா சுவராக நின்று கொண்டார். முத்தலாக்கில் இருந்து முஸ்லிம் பெண்களை விடுவிக்க மத்திய அரசு சட்டம் இயற்றியது. மம்தா கோபம் அடைந்தார்.

இடைத்தரகர்களிடம் இருந்து விவசாயிகளை பாதுகாக்க மத்திய அரசு சட்டம் இயற்றியது. அதையும் எதிர்த்தார்.

‘மா, மதி, மனுஷ்’ என்று பேசும் மம்தா பானர்ஜி, மாபிய ராஜ்யத்தைத்தான் இங்கே வளர்த்துள்ளார்.

முன்பெல்லாம் வேலை தேடி மக்கள் அசன்சோல் நகருக்கு வருவார்கள். அந்த அளவுக்கு எல்லா தொழிற்சாலைகளையும் இங்கே பார்க்க முடியும். ஆனால், இப்போது இங்குள்ள மக்கள் வேலை தேடி வேறு நகருக்கு செல்கிறார்கள். திரிணாமுல் காங்கிரசின் மோசமான நிர்வாகமே இதற்கு காரணம்.

இவ்வாறு மோடி பேசினார்.

மேலும் செய்திகள்