புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்; வர்த்தக நிறுவனங்கள் மூடல்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வர்த்தக நிறுவனங்கள், மூடப்பட்டன. விதிகளை மீறியவர்களிடம் போலீசார் அபராதம் வசூலித்தனர்.

Update: 2021-04-25 00:34 GMT
புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

ஊரடங்கு அமல்
தொற்று பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதிலும் புதுவையில் நாள்தோறும் 800-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் உயிரிழப்பும் பதிவாகி வருகிறது.இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது பலனளிக்காததால் வாரஇறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நாளை (திங்கட்கிழமை) காலை 5 மணிவரை என மொத்தம் 55 மணிநேர முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.

கடைகளுக்கு அனுமதி
ஆனால் அத்தியாவசிய தேவைகளான காய்கறி, மளிகை, மருந்து, இறைச்சி கடைகளை திறக்கவும், பஸ்கள், ஆட்டோக்களை இயக்கவும் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு இருந்தது.அந்த வகையில் பி.ஆர்.டி.சி. மற்றும் தனியார் பஸ்கள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டன. மிக சொற்ப எண்ணிக்கையிலேயே பயணிகள் பஸ்களில் சென்றதை காண முடிந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் முழு ஊரடங்கு என்பதால் புதுச்சேரியில் பஸ் போக்குவரத்து மேலும் பாதிக்கும்.அத்தியாவசிய தேவை என்ற அடிப்படையில் காய்கறி, மளிகை, பால், இறைச்சிக்கடைகள், பெட்ரோல் 
பங்குகள் ஆகியவற்றை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஓட்டல்களில் பார்சல் சேவை மட்டும் நடந்தது.

பூங்கா, சுற்றுலாதலங்கள் மூடல்
பெரியமார்க்கெட், மீன் மார்க்கெட், சின்ன மார்க்கெட், நெல்லித்தோப்பு மார்க்கெட் என அனைத்து மார்க்கெட்டுகளும் இயங்கின. உழவர்சந்தைகள், கடைகள், டீக்கடைகள் ஆங்காங்கே திறந்து இருந்தன. இருப்பினும் நகர் மற்றும் புறநகர் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் பொதுமக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்து இருந்ததால் பெரும்பாலான கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டு இருந்தன.வர்த்தக நிறுவனங்கள், ‌ஷாப்பிங் மால்கள், மொத்த விற்பனை கடைகள் மூடப்பட்டன. குபேர் பஜாரில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பூங்காக்கள், சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. அனைத்து மத வழிபாட்டுதலங்களிலும் வழிபாட்டு நிகழ்வுகள் நடத்தப்படவில்லை.வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்ததால் காந்தி வீதி, நேரு வீதி, காமராஜர் 
சாலை, அண்ணாசாலை, புஸ்சி வீதி, மறைமலையடிகள் சாலை, கடலூர் சாலை உள்ளிட்ட அனைத்து முக்கிய சாலைகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

போலீசார் அபராதம்
அத்தியாவசிய பொருட்கள் வாங்க சிலர் வெளியே வந்தனர். தேவையின்றி வெளியில் சுற்றியவர்கள், விதிகளை மீறியவர்களை மடக்கிப்பிடித்து போலீசார் அபராதம் விதித்தனர்.தொழிற்பேட்டைகளிலும் அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் தவிர பிற தொழிற்சாலைகள் இயங்கவில்லை. மாநில எல்லைகளில் போலீசார் முறையாக விசாரணைக்கு பின்னரே பிற மாநிலத்தவரை உள்ளே நுழைய அனுமதித்தனர். தனியார் நிறுவனங்களுக்கு பணிக்கு செல்பவர்கள் அடையாள அட்டையை காண்பித்த பிறகே அனுமதிக்கப்பட்டனர்.காலையில் வீதிகளில் மக்கள் நடமாட்டம் ஓரளவு இருந்தபோதிலும் பிற்பகலில் நடமாட்டம் முற்றிலும் முடங்கியது. நகரப்பகுதி முழுவதும் ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டது. ஆங்காங்கே நின்றபடி மெகா ஒலிபெருக்கி மூலம் கொரோனா மற்றும் ஊரடங்கு நடைமுறைகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்தபடி இருந்தனர்.

நாளை முதல்...
நாளை (திங்கட்கிழமை) முதல் வர்த்தக நிறுவனங்கள், கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ளது. அதன்படி விலக்கு அளிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய தேவைகளான காய்கறி, மளிகை, பழக்கடைகள், பால் பூத்துகள், மருந்து விற்பனை கடைகள் தவிர பிற வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் பிற்பகல் 2 மணிவரை மட்டுமே செயல்பட வேண்டும். அதேபோல் மதுபான கடைகளும் பகுதி நேரமே திறந்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் செய்திகள்