அரசு ஆஸ்பத்திரிகளில் 551 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள்; பிரதமர் நிதியின் கீழ் அமைக்க நடவடிக்கை

பிரதமர் நிதியின் கீழ் அரசு ஆஸ்பத்திரிகளில் 551 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Update: 2021-04-25 19:10 GMT
ஆக்சிஜன் தேவை அதிகரிப்பு
நாடு முழுவதும் தினந்தோறும் 3 லட்சத்துக்கு அதிகமானோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில் ஆக்சிஜனுக்கு முக்கிய பங்கு உள்ளது. நோயாளிகள் அதிகரிப்பதால் ஆக்சிஜனுக்கான தேவை அதிகரிக்கிறது. இதனால் தட்டுப்பாடு ஏற்படுகிறது.டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறைகளால் நோயாளிகள் இறக்கும் நிலையில், ஆக்சிஜன் உற்பத்தியையும், வினியோகத்தையும் பெருக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் ஆலைகள்
இந்த நிலையில் பி.எம்.கேர்ஸ் பண்ட் என்னும் பிரதமர் நிதியின் கீழ், அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை ஏற்படுத்துவதற்கு கொள்கை ரீதியிலான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலைகளை கூடிய விரைவில் அமைத்து, செயல்பாட்டுக்கு கொண்டு வருமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.இதன்படி அரசு ஆஸ்பத்திரிகளில் 551 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்படுகின்றன. இந்த ஆலைகள் அனைத்தும் மாவட்ட அளவில் ஆக்சிஜன் கிடைப்பதற்கு பெரும் ஊக்கம் அளிக்கும் என பிரதமர் மோடி கூறி உள்ளார்.

பொதுசுகாதார அமைப்பு வலுவாகும்
இந்த ஆக்சிஜன் ஆலைகள், பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மாவட்ட தலைமையகத்தில் அடையாளம் காணப்படுகிற அரசு ஆஸ்பத்திரிகளில் அமைக்கப்படும். இந்த கொள்முதல், சுகாதார அமைச்சகம் மூலம் செய்யப்படும் என தகவல்கள் கூறுகின்றன.ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் 162 ஆக்சிஜன் ஆலைகளை அரசு ஆஸ்பத்திரிகளில் அமைப்பதற்கு பிரதமர் நிதியின் கீழ் ரூ.201.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்போது புதிதாக 551 ஆக்சிஜன் ஆலைகளை நிறுவுவதின் அடிப்படை நோக்கம், பொது சுகாதார அமைப்பை மேலும் வலுவாக்குவதுடன், இந்த ஆஸ்பத்திரிகள் ஒவ்வொன்றிலும் ஆக்சிஜன் உற்பத்தி வசதி இருப்பதை உறுதி செய்வதாகும். இந்த ஆஸ்பத்திரிகளின் அன்றாட ஆக்சிஜன் தேவைகளை இந்த ஆலைகள் நிறைவேற்றும்.

இந்த தகவல்களை பிரதமர் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்