கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க 5 மந்திரிகள் நியமனம்-முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க 5 மந்திரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

Update: 2021-05-04 18:23 GMT
பெங்களூரு:
கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க 5 மந்திரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
மந்திரிகள் நியமனம்
கர்நாடக மந்திரிசபையின் சிறப்பு கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. 
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா பரவல் 3,4 மடங்கு அதிகரித்து விட்டது. இதை தடுப்பது குறித்து மந்திரிசபை கூட்டத்தில் ஆலோசனை நடத்தினோம். மாவட்ட பொறுப்பு மந்திரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உடனே சென்று பணியாற்ற வேண்டும். அங்கு பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும். அதே இடத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் மந்திரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர், படுக்கை போன்ற விஷயங்களை நிர்வகிக்க தனித்தனியாக 5 மந்திரிகளை நியமனம் செய்துள்ளேன். 
யார்? யார்?
மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், ஆக்சிஜன் வினியோகம் குறித்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் நிர்வாகத்தை துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் மேற்கொள்வார்.
மருத்துவ, நர்சிங் கல்லூரிகளில் படிக்கும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களை கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளையும் அஸ்வத் நாராயண் மேற்கொள்வார். அரசு-தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை ஒதுக்கீட்டு பணிகளை மேற்கொள்ள மந்திரிகள் ஆர்.அசோக், போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆக்சிஜன் வினியோகம்
கொரோனா தடுப்பு போர் அலுவலகம், உதவி மையங்களை நிர்வகிக்கும் பணி வனத்துறை மந்திரி அரவிந்த் லிம்பாவளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை அவர் செய்வார். கர்நாடகத்திற்கு மத்திய அரசின் ஆக்சிஜன் வினியோகம் 850 டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பல்லாரியில் உள்ள ஜிந்தால் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் மராட்டியத்திற்கு அனுப்பப்படுகிறது. இதை நிறுத்தி கர்நாடகத்திற்கு பயன்படுத்த அனுமதிக்குமாறு மத்திய மந்திரிகளிடம் கேட்டுள்ளோம். அவர்களும், ஆலோசிப்பதாக உறுதியளித்து உள்ளனர்.
கடும் நடவடிக்கை
கடந்த 3-ந் தேதி ஆக்சிஜன் உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை நடத்தினேன். அதிகளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதாக உறுதி அளித்துள்ளனர். ரெம்டெசிவிர் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். தேவையான அளவுக்கு அந்த மருந்தை வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இந்த ரெம்டெசிவிர்மருந்தை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சாம்ராஜ்நகரில் கொரோனா நோயாளிகள் இறந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மந்திரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவயோகி கலசத்தை நியமனம் செய்துள்ளேன். அவர் விசாரணை நடத்தி 3 நாட்களில் அரசுக்கு அறிக்கை அளிப்பார். இதில் தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
டாக்டர்கள் நியமனம்
கொரோனா பரவல் காரணமாக சுகாதார நெருக்கடி நிலை கர்நாடகம் உள்பட நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. வைரஸ் பரவலை தடுக்க மந்திரிகள், அதிகாரிகள், டாக்டர்கள் உள்பட மருத்துவ துறையினர் அனைவரும் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.
பத்திரிகையாளர்களை முன்கள பணியாளர்களாக கருதி அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடகத்திற்கு அதிகளவில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்தை அதிகமாக பெற மத்திய அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன். அதிகளவில் டாக்டர்கள், செவிலியர்களை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மருந்து தொகுப்பு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட பொறுப்பு மந்திரிகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதிகளவில் கொரோனா சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும். 1 லட்சம் ஆக்சிஜன் உபகரணங்கள் இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
வீட்டு தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மருந்து தொகுப்பு வழங்கப்படும். பெங்களூருவில் தனியார் மருத்துவமனை படுக்கைகள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாக தேஜஸ்வி சூர்யா எம்.பி. என்னிடம் கூறினார். இதில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 
சாம்ராஜ்நகர் சம்பவத்தில் என்னையும், சுகாதாரத்துறை மந்திரியையும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சித்தராமையா கூறியுள்ளார். அவர் எதற்கெடுத்தாலும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறுகிறார். அவர் அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை கூறினால் அதை செயல்படுத்த தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்