புதுச்சேரி முதல்-அமைச்சராக ரங்கசாமி நாளை பதவி ஏற்கிறார்; கவர்னர் மாளிகையில் எளிய முறையில் விழா

கவர்னர் மாளிகையில் எளிய முறையில் நடக்கும் விழாவில் புதுவை முதல்-அமைச்சராக ரங்கசாமி நாளை பதவி ஏற்கிறார்.

Update: 2021-05-06 06:23 GMT

கூட்டணி அமைச்சரவை

புதுவையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

அதாவது என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பா.ஜ.க. 6 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. எனவே இந்த கூட்டணி சார்பில் ஆட்சி அமைக்கப்படுகிறது. இதுதொடர்பாக பா.ஜ.க. மேலிட தலைவர் நிர்மல்குமார் சுரானா உள்ளிட்ட தலைவர்கள் ரங்கசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது அமைச்சரவையில் இடம்பெறுவது தொடர்பாக இரு கட்சி தலைவர்களும் பேசியதாக தகவல்கள் வெளியாயின.

நாளை பதவி ஏற்பு

அதன்படி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு முதல்-அமைச்சர் உள்பட 4 அமைச்சர் பதவிகளும், பா.ஜ.க.வுக்கு 2 அமைச்சர் பதவிகளும் ஒதுக்குவது என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த கூட்டணி அரசின் முதல்-அமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து தனக்கு எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டு கொடுத்துள்ள ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரினார்.

இந்தநிலையில் புதிய முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவி ஏற்பது எப்போது? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கிடையே சட்டசபையில் முதல்- அமைச்சர் அலுவலகம் உள்ளிட்ட மற்ற அலுவலகங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது 4-வது முறையாக ரங்கசாமி நாளை (வெள்ளிக்கிழமை) பதவி ஏற்பது உறுதியாகி உள்ளது. இதனை அவரே நேற்று சேலத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கவர்னர் மாளிகையில் விழா

கவர்னர் மாளிகையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிற்பகல் 1 மணியளவில் முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவி ஏற்றுக் கொள்கிறார். அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

ரங்கசாமியுடன் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்களா? என்பது பற்றி உறுதியாக தெரியவில்லை. தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் பதவியேற்பு விழாவினை மிகவும் எளிமையாக நடத்தவும், முக்கிய பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை புதுவை அரசு அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்