கொரோனா பாதித்து மறைந்த நாடாளுமன்ற மேலவை எம்.பி. மொகபத்ராவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்த நாடாளுமன்ற மேலவை எம்.பி. மற்றும் பிரபல சிற்பியான மொகபத்ரா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Update: 2021-05-09 17:32 GMT
புவனேஸ்வர்,

நாடாளுமன்ற மேலவை எம்.பி.யாக இருந்தவர் ரகுநாத் மொகபத்ரா.  கடந்த வாரம் இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.  இதனால் இவரை ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.  அவருக்கு வயது 78.  நாட்டின் மிக உயரிய பத்ம விபூஷண் விருது பெற்ற பெருமைக்கு உரியவர் ஆவார்.  அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், மொகபத்ரா ஜி மறைவு செய்தி அறிந்து வேதனையுற்றேன்.  கலை, கட்டிட கலை மற்றும் கலாசார உலகில் அளப்பரிய பங்காற்றியவர்.  பாரம்பரிய கைவினை பொருட்களை பிரபலப்படுத்தும் நோக்கில் பங்காற்றியதில் அவர் நினைவுகூரப்படுவார்.

அவரது குடும்பம் மற்றும் நலம் விரும்பிகளின் எண்ணத்துடன் இணைந்துள்ளேன்.  ஓம் சாந்தி என தெரிவித்து உள்ளார்.  இதேபோன்று ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்னாயக்கும் மொகபத்ரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.

கடந்த 1975ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும், 2001ம் ஆண்டு பத்ம பூஷண் விருதும் மற்றும் 2013ம் ஆண்டில் பத்ம விபூஷண் விருதும் பெற்றுள்ளார்.

மேலும் செய்திகள்