கர்நாடகத்தில் ஊரடங்கை போலீசார் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் - மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர்

கர்நாடகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை போலீசார் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் கூறியுள்ளார்.

Update: 2021-05-09 22:03 GMT
ஐதராபாத்,

கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த மாநில அரசு அறிவித்துள்ள ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனிடையே கர்நாடகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு அந்த பணியை மேற்கொள்ள தொழில்துறை மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் நியமிக்கப்பட்டுள்ளார். 

அவர் பெலகாவியில் நேற்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் ஜெகதீஷ் ஷெட்டர் பேசியதாவது:-

கோலாப்பூரில் இருந்து கர்நாடகத்திற்கு ஒரு பகுதி ஆக்சிஜன் அனுப்பப்படுகிறது. அதற்கு மராட்டியம் தடை விதித்தால், வேறு இடத்தில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வருவது குறித்து அரசு ஆலோசனை நடத்தும். ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை மத்திய அரசு ஒதுக்க உள்ளது. அதில் ஒரு டேங்கர் லாரி பெலகாவிக்கு ஒதுக்கப்படும். செயற்கை சுவாச கருவிகளை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

கொரோனா பரிசோதனை முடிவை விரைவாக வழங்க வேண்டும். இதன் மூலம் வைரஸ் பரவலை குறைக்க முடியும். பெலகாவி மாவட்டத்தில் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் காலி இடங்களை உடனே நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் பெலகாவியில் மருத்துவ படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.

புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளை (அதாவது இன்று) முதல் அமலுக்கு வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை போலீசார் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்திற்கு கூடுதலாக ஆக்சிஜனை ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. அந்த கூடுதல் ஆக்சிஜன் 4 நாட்கள் கர்நாடகத்திற்கு கிடைக்கும். இதன் மூலம் கர்நாடகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

இவ்வாறு ஜெகதீஷ்ஷெட்டர் கூறினார்.

மேலும் செய்திகள்