விதிமுறைகளை மீறியதால் தனது தாயிடம் இருந்து காய்கறிகளை பறிமுதல் செய்த நகராட்சி ஊழியர்

மராட்டிய மாநிலத்தில் நகராட்சி ஊழியர் ஒருவர், விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்த தனது தாயிடம் இருந்து காய்கறிகளை பறிமுதல் செய்துள்ளார்.

Update: 2021-05-12 01:55 GMT
மும்பை,

மராட்டிய மாநிலம் அமகத் நகர் மாவட்டம் பதார்டி டவுன் மெயின் பஜார் பகுதியை சேர்ந்தவர் ரஷீத் சேக் (வயது36). இவர் பதார்டி நகராட்சியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். மேலும் மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை அமல்படுத்த அமைக்கப்பட்ட பறக்கும் படையில் இடம்பெற்று உள்ளார். 

இந்தநிலையில் சம்பவத்தன்று அவர் சோதனை நடத்தும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, அவரது வீட்டின் அருகே அவரின் தாயார் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். இதைபார்த்த ரஷீத் சேக் தாயிடம் இருந்து காய்கறிகளை பறிமுதல் செய்தார். மேலும் அந்த காய்கறிகளை நகராட்சி வண்டியில் அள்ளிப்போட்டார். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இது குறித்து ஊழியர் ரஷீத் சேக்கிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், “கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வீதி, வீதியாக சென்று காய்கறி விற்க தடை இல்லை. ஆனால் வீதிகளில் ஓரிடத்தில் அமர்ந்தோ அல்லது கூடாரம் அமைத்தோ காய்கறி வியாபாரம் செய்ய அனுமதி இல்லை. இது தொடர்பாக எனது தாயிடம் முன்கூட்டியே தெளிவாக கூறியிருந்தேன். ஆனால் அவர் விதிமுறையை மீறி தள்ளுவண்டியை ஓரிடத்தில் நிறுத்தி வியாபாரம் செய்ததால், இந்த நடவடிக்கையை எடுத்தேன்’’ என்றார்.

பெற்ற தாயிடமே காய்கறியை பறிமுதல் செய்து கொரோனா தடுப்பு விதிமுறையை அமல்படுத்திய ரஷீத் சேக்கை நகராட்சி கமிஷனர் தனஞ்செய் கோலேகர் வெகுவாக பாராட்டினார். அதில் அவர், எங்களது நகராட்சி ஊழியர் ரஷீத் சேக் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்