புதுச்சேரியில் தேர்தல் முடிவு வெளியாகி 24 நாட்களுக்குப் பின் ரங்கசாமி உள்பட எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர்; அமைச்சரவை விரிவாக்கத்தில் தொடர்ந்து இழுபறி

புதுச்சேரியில் தேர்தல் முடிவு வெளியாகி 24 நாட்களுக்குப் பின் ரங்கசாமி உள்பட 32 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அமைச்சரவை விரிவாக்கத்தில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. இடையே தொடர்ந்து இழுபறி இருந்து வருகிறது.

Update: 2021-05-26 23:56 GMT
எளிய முறையில் விழா
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் முடிவில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 16 இடங்களை கைப்பற்றி என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடித்தது. இதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்றார்.இதைத்தொடர்ந்து புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பதற்கான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் திடீரென கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு ரங்கசாமி சிகிச்சைக்கு சென்றார்.இதனால் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பது தாமதமானது. இந்தநிலையில் சிகிச்சை முடிந்து ரங்கசாமி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இதற்கிடையே தற்காலிக 
சபாநாயகராக லட்சுமி நாராயணன் நியமிக்கப்பட்டார். தற்காலிக சபாநாயகர் பதவி ஏற்பு விழா கவர்னர் மாளிகையில் நேற்று எளிமையாக நடந்தது.

பதவி ஏற்றார்
தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்தார். அதைத்தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறைக்கு வந்த லட்சுமி நாராயணன் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அலுவலக இருக்கையில் அமர வைத்து அவருக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து கூறினார். அப்போது அவரது காலில் விழுந்து லட்சுமிநாராயணன் வாழ்த்து பெற்றார்.

24 நாட்களுக்குப் பின்...
தேர்தல் முடிவுகள் வெளியானபின் 24 நாட்களுக்குப் பிறகு புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு விழாவும் நேற்று நடந்தது. இதற்காக சட்டமன்ற கூட்டம் கூட்டப்பட்ட நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சபாநாயகர் தனது அறையில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சியை நடத்தினார்.அங்கு முதலில் முதல்-அமைச்சர் ரங்கசாமி எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக்கொண்டார். அவரை தொடர்ந்து மற்ற எம்.எல்.ஏ.க்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து நியமன எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அமைச்சரவை விரிவாக்கம் எப்போது?
எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்று விட்ட நிலையில் புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம் எப்போது? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக முடிவு எடுப்பதில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. இடையே உடன்பாடு எட்டப்படாத நிலையே இருந்து வருகிறது.

மேலும் செய்திகள்