சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் உத்தரபிரதேச அரசியல் கட்சிகள்; பா.ஜ.க.வின் கூட்டணி கட்சிக்கு வலைவீசும் அகிலேஷ்

உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த வருடம் நடைபெற இருக்கும் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராக தொடங்கி விட்டன. பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்ற அப்னா தளம் (எஸ்) கட்சிக்கு அகிலேஷ் சிங் யாதவ் வலைவிரித்துள்ளார்.

Update: 2021-06-03 14:07 GMT

குர்மி சமூகம்

பீகாரில் அதிகமுள்ள குர்மி சமூகத்தினர் அதன் எல்லையில் அமைந்துள்ள உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியிலும் கணிசமாக இருக்கின்றனர். இவர்கள் தம் சமூகத்தினரின் அப்னா தளம் (எஸ்) கட்சிக்கு ஆதரவை தொடர்ந்து அளித்து வருகின்றனர். இதை உணர்ந்த பா.ஜ.க. கடந்த 2014-ம் ஆண்டு அப்னா தளம் (எஸ்) கட்சியை தனது கூட்டணியில் சேர்த்தது. இதன் நிறுவனரான சோனு லால் பட்டேலின் மகள் அனுப்பிரியா பட்டேைல பிரதமர் நரேந்திர மோடியின் முதல் 5 ஆண்டு மந்திரிசபையில் மத்திய இணை மந்திரியாகவும் அமர்த்தி இருந்தது.

மந்திரி பதவி இல்லை

எனினும், இந்த நிலைமை கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் உத்தரபிரதேச சட்டசபையில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த தனி மெஜாரிட்டியால் மாற தொடங்கியது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலிலும் தொடர்ந்த பிரதமர் மோடி அலையால், அப்னா தளம் (எஸ்) கட்சியின் செல்வாக்கு பா.ஜ.க.வுக்கு தேவைப்படவில்லை. இதன் காரணமாக அனுப்பிரியா பட்டேலுக்கு தற்போது மத்திய மந்திரிசபையில் இடம் அளிக்கப்படவில்லை. இதேபோல், உத்தரபிரதேச மாநில மேலவை எம்.எல்.ஏ.வாக இருக்கும் அனுப்பிரியாவின் கணவரான ஆசிஷ் பட்டேலுக்கும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மந்திரிசபையில் எந்த பதவி கிடைக்கவில்லை.

சமாஜ்வாடி தீவிரம்

இதனால், பா.ஜ.க. மீது அப்னா தளம் (எஸ்) தலைவர் அனுப்பிரியா அதிருப்தியில் உள்ளார். இந்த சூழலை பயன்படுத்தி அவரது கட்சிக்கு முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் வலைவீசியுள்ளார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில் அமைதியாக சிறிய கட்சிகளை சேர்த்து வரும் சமாஜ்வாடி, அனுப்பிரியாவுடன் கூட்டணி அமைக்க முயல்கிறது.

மாயாவதியுடன் நட்பு

அதேசயம் அனுப்பிரியா, மாயாவதியுடன் நட்பு பாராட்டி வருகிறார். பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூ்டா சமீபத்தில் மாயாவதிக்கு எதிராக கருத்து கூறி இருந்தார். இதை கண்டித்த அனுப்பிரியா, அவர் மீது நடவடிக்கை எடுக்க யோகி ஆதியநாத்திடம் வலியுறுத்தி இருந்தார். இதை வைத்து மாயாவதியுடன் அப்னா தளம் (எஸ்) கூட்டணி அமைக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும் பேசப்படுகிறது.

ஒருவேளை கூட்டணியில் இருந்து அப்னா தளம் (எஸ்) கட்சியின் அனுப்பிரியா வெளியேறினால் அவரது தாய் நடத்தி வரும் அப்னா தளம் கட்சியை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ.க. தயாராக உள்ளது.

மேலும் செய்திகள்