கொரோனா தடுப்பூசி விநியோகத்தை மத்திய அரசே நடத்தும்; 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி- பிரதமர் மோடி

தடுப்பூசியின் மொத்த கட்டுப்பாட்டை இப்போது மத்திய அரசு திரும்பப் பெறுகிறது, அடுத்த இரண்டு வாரங்களில் செயல்படுத்தப்படும். 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் மத்திய அரசு இலவச தடுப்பூசிகளை வழங்கும்.

Update: 2021-06-07 12:18 GMT
புதுடெல்லி

 கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

100 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய நோய்த் தொற்று உலக மக்களை பாதித்து வருகிறது. உலகத்தின் பெரும்பாலான நாடுகள் கொரோனா பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா முன்களத்தில் நின்று போராடி வருகிறது. அன்புக்குரிய பலரை நாம் இழந்து விட்டோம். கொரோனாவுக்கு எதிராக இந்தியா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போரை மேற்கொண்டுள்ளது இந்தியா பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. 

கொரோனாவை தடுக்க ஒரே பேராயுதம் தடுப்பூசி மட்டும்தான். இந்தியாவில் தயாரித்த தயாரித்த தடுப்பூசிகள்  பல லட்சகணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளது.இந்தியாவின் கோவாக்சின் ஒரு உயிர் காக்கும் மருந்தாக அமைந்துள்ளது; உள்நாட்டில் தடுப்பூசி தயாரிக்காவிட்டால் நாம் என்ன செய்திருக்க முடியும்? 

கொரோனா என்ற அரக்கனை ஒழிப்பதற்காக  முகக்கவசம், ஆக்சிஜன் ஆகியவற்றை அதிகமாக உற்பத்தி செய்கிறோம். . கொரோனா தொற்றால் மருத்துவ துறையில் அடிப்படைவசதிகளை நாம் மேம்படுத்தியுள்ளோம். 

மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை இதுவரை இல்லாத அளவு உயர்த்தியிருக்கிறோம். அனைத்து கட்டமைபைப்புகளையும்பயன்படுத்தி அனைத்து பகுதிகளுக்கும் ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட்டுள்ளன. போர்க்கால அடிப்படையில் ஆக்ஸிஜன் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது; மருத்துவமனைகளையும் கட்டமைத்துள்ளோம்.

முகக்கவசம் சமூக இடைவெளி போன்றவற்றை எக்காரணம் கொண்டும் மக்கள் கைவிட்டுவிடக்கூடாது.கொரோனாவை கட்டுப்படுத்த முகக்கவசம், தனி மனித இடைவெளி முக்கியக் கவசம் ஆகும்.

நல்ல நோக்கங்கள் மற்றும் தெளிவான கொள்கை" காரணமாக இந்தியாவின் தடுப்பூசி கொள்கை வெற்றிகரமாக உள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் தடுப்பூசி பற்றாக்குறை விரைவில் முடிவுக்கு வரும்.இருப்பினும், தேவையுடன் ஒப்பிடும்போது, உற்பத்தி குறைவாகவே உள்ளது. தடுப்பூசியை பொறுத்தவரையில் சில இடங்களில் பற்றாக்குறை நிலவுகிறது. இது விரைவில் சரி செய்யப்படும். தொடர்ந்து நாம் தடுப்பூசியை அனைவருக்கும் கொண்டு செல்வோம். இதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து வேகப்படுத்தப்படும்.

தடுப்பூசியை வாங்குவது உள்ளிட்டவற்றை நாங்களும் செய்கிறோம் என சில மாநில அரசுகள் வலியுறுத்தின. மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையில் சில மாநிலங்களுக்கு மாற்று கருத்து இருந்தன.

தடுப்பூசி பற்றாக்குறையை போக்க தங்களுக்கும் உரிமை வேண்டும் என மாநிலங்கள் கோரின. இதனையடுத்து அவர்களுக்கும் உரிமை வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது அதில் உள்ள சிக்கல்களை மாநில அரசுகள் உணர்ந்து விட்டன. தற்போது மத்திய அரசே இதனை செய்யட்டும் என்று அந்த மாநில அரசுகள் கூறுகின்றன.

இதனால் மத்திய அரசே மீண்டும் தடுப்பூசியை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு வாங்கி மாநிலங்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையை தொடரும்.

மேலும் 3 புதிய கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனையில் உள்ளன. மூக்கின் வழியாக சொட்டு மருந்துபோல் செலுத்தக்கூடிய தடுப்பு மருந்தும் பரிசோதனையில் உள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 23 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது; தடுப்பூசி செலுத்துவதை மிகப்பெரிய இயக்கமாக மாற்றியுள்ளோம்.இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேகம் இருமடங்கு அதிகரித்துள்ளது; 

தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்; வெளிநாடுகளிலிருந்து அதிகளவில் தடுப்பூசியை இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.

 அடுத்த இரண்டு வாரங்களில் செயல்படுத்தப்படும். 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் மத்திய அரசு  இலவச தடுப்பூசிகளை வழங்கும். ஜூன் 21 முதல் மத்திய அரசு  மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசிகளை வழங்கும்.கொரோனா தடுப்பூசி விநியோகத்தை மத்திய அரசே முழுமையாக நடத்தும்.

பணம் செலுத்த விரும்புவோர் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லலாம்,  தனியார் மருத்துவமனைகள் இன்னும் 25 சதவீத அளவை உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக வாங்க முடியும்.

75 சதவீத  தடுப்பூசி இலவசமாகவும், மத்திய அரசின் கீழ், 25 சதவீதம்  தனியார் மருத்துவமனைகளாலும் வழங்கப்படும்.

வறுமைக்கோட்டுக்கு கிழே உள்ளவர்களுக்கு தீபாவளி வரை உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என அவர் கூறினார்.

மேலும் செய்திகள்