கொரோனா தடுப்பூசி முகாம்களை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- பிரதமர் மோடி

கொரோனா தடுப்பூசி முகாம்களை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.;

Update:2021-06-07 17:52 IST
புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

தடுப்பூசி மூலம் பல லட்சகணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கிறோம். தடுப்பூசியை இதற்கு முன் இல்லாத வகையில் விரைவாக உற்பத்தி செய்து பயன்படுத்துகிறோம்.

தடுப்பூசியை பொறுத்தவரையில் சில இடங்களில் பற்றாக்குறை நிலவுகிறது. இது விரைவில் சரி செய்யப்படும். தொடர்ந்து நாம் தடுப்பூசியை அனைவருக்கும் கொண்டு செல்வோம். இதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து வேகப்படுத்தப்படும்.

தடுப்பூசியை வாங்குவது உள்ளிட்டவற்றை நாங்களும் செய்கிறோம் என சில மாநில அரசுகள் வலியுறுத்தின. மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையில் சில மாநிலங்களுக்கு மாற்று கருத்து இருந்தன.
அவர்களது கோரிக்கைகளுக்கு ஏற்ப அவ்வப்போது கொள்கைகளில் மாற்றம் செய்கிறோம். கடந்த மே முதல் மாநில அரசுகளுக்கு தடுப்பூசி கொள்கையில் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் இறுதி வரை மட்டுமே தடுப்பூசிகளை நாங்கள் விநியோகித்து வந்தோம். தடுப்பூசி விநியோகத்தில் மத்திய அரசே இனி முடிவெடுக்கும்.

இந்தியாவைப் பொறுத்தவரை அனைவருக்கும் இலவச தடுப்பூசிதான். இலவசம் வேண்டாம் என்பவர்கள் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். தடுப்பூசி விநியோகத்திற்கான 25 சதவிகித பங்கையும் மத்திய அரசே ஏற்கும். ஜூன் 21 முதல் அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாகவே தடுப்பூசி விநியோகிக்கப்படும். 

இந்தியாவில் உற்பத்தியாகும் தடுப்பூசிகளில் 75 சதவிகிதத்தை மத்திய அரசு வாங்கி மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும்.  தனியார் மருத்துவமனைகள் சேவைக் கட்டணமாக ரூ.150-க்கும் மேல் வசூலிக்கக் கூடாது.  கொரோனா தடுப்பூசி முகாம்களை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார். 

மேலும் செய்திகள்