ஊரடங்கு எதிரொலி; ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு உண்டியல் வருமானம் குறைவு - கோவில் நிர்வாகம் தகவல்

ஊரடங்கால் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்ததால் உண்டியல் வருமானம் குறைந்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-06-11 01:58 GMT
ஸ்ரீகாளஹஸ்தி, 

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ந்தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை உண்டியல்களில் செலுத்திய காணிக்கைகள் எண்ணும் பணி நேற்று காலை கோவில் அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. அதில் பணம் ரூ.67 லட்சத்து 46 ஆயிரத்து 623, தங்கம் 52 கிராம், வெள்ளி 469 கிலோ 750 கிராம், வெளிநாட்டு பணம் 20 கிடைத்ததாக கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்துள்ளார்.

கடந்த இரு மாதங்களாக நாடெங்கிலும் கொரோனா தொற்று அதிகமாகப் பரவி வருவதால், ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது.

இதனால் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் உண்டியல் வருமானமும் குறைந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கமாக மாதம் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும்மேல் உண்டியல் வருமானம் கிடைத்து வந்தது. ஆனால் தற்போது பக்தர்கள் வருகை குைறந்ததால் உண்டியல் வருமானமும் கணிசமாக குறைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்