மாநில நலன் கருதி அரசுடன் இணைந்து செயல்படுவேன்: புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

மாநில நலன் கருதி அரசுடன் இணைந்து செயல்படுவேன் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2021-06-17 02:23 GMT
எம்.எல்.ஏ.க்களுக்கு தேநீர் விருந்து
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடித்தது. இந்த ஆட்சியின் முதல்-அமைச்சராக கடந்த மாதம் 7-ந் தேதி ரங்கசாமி பதவியேற்றுக்கொண்டார். இந்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி சார்பில் சபாநாயகர் வேட்பாளராக ஏம்பலம் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நேற்று சட்டசபையில் சபாநாயகராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.அதைத்தொடர்ந்து புதுச்சேரி கவர்னர் மாளிகையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தேநீர் விருந்து அளித்தார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு
இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., தி.மு.க. மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர்.

நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள். அனைவரும் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்ற வேண்டும். இந்த அரசு மக்களுக்கான அரசாக செயல்படவேண்டும். புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும் அனைத்து திறனும் உடைய மாநிலமாக விளங்குகிறது. இதனை மிகச்சிறந்த மாநிலமாக உருவாக்க நான் உறுதுணையாக இருப்பேன். மாநில நலன் கருதி அரசுடன் இணைந்து செயல்படுவேன். இணைந்து பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்