சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் திட்டவட்டம்

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தது.

Update: 2021-06-18 19:21 GMT
புதுடெல்லி,

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையை கேரளாவுக்கு மாற்றக் கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக பதிலளிக்க சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஏப்ரல் 24-ந் தேதி உத்தரவிட்டது.

இதற்கிடையில், இந்த கொலை வழக்கு விசாரணையை கேரளாவுக்கு மாற்றக்கூடாது என தெரிவித்து மறைந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி இடையீட்டு மனு தாக்கல் செய்தார். எதிர்மனுதாரராக சேர்க்கக் கோரிய செல்வராணியின் மனு தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஏப்ரல் 16-ந் தேதி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்குத் தள்ளிவைத்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய கோடைகால அமர்வு முன் நேற்று மீண்டும் நடைபெற்றது.

தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.நரசிம்மா, வக்கீல் டி.குமணன் ஆஜராகி, தமிழகத்தில் புதிய அரசு ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க ஆலோசனை பெற வேண்டி உள்ளது. எனவே 2 வார காலம் அவகாசம் வேண்டும் என வாதிட்டனர்.

அப்போது மனுதாரர் ரகு கணேஷ் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அஞ்சனா பிரகாஷ், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வன்முறை நிகழ்த்தப்படுகிறது. வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அதற்கு நீதிபதிகள், சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்ததுடன், இந்த வழக்கில் அரசியல் தலையீடு இல்லை என்றும் தெரிவித்தனர். தமிழக அரசு கோரிய அவகாசத்தை அளித்து, வழக்கு விசாரணையை கோடை விடுமுறைக்கு பின் தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்