மாநில கட்சிகளை மக்கள் ஆதரிக்க வேண்டும் - கர்நாடக முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி பேச்சு

அண்டை மாநிலங்களில் மாநில கட்சிகள் சிறப்பான ஆட்சி நடத்துவதாக கர்நாடக முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-02 02:00 GMT
பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹனகல் தொகுதி நிர்வாகி காதர் சேக் தலைமையில், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் சேர்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;-

“இந்த ஆண்டு ஜி.எஸ்.டி. மூலம் கர்நாடகத்திற்கு ரூ.1.45 லட்சம் கோடி வருவாய் அரசுக்கு வந்துள்ளது. ஆனால் இந்த கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவ அரசுக்கு மனமில்லை. இத்தகைய மோசமான அரசு நமது மாநிலத்தில் நடக்கிறது. 

என்னை ஆட்சி அதிகாரத்தில் இருந்து கீழே இறக்கியது கடவுள்தான். இதற்காக அந்த கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த 17 எம்.எல்.ஏ.க்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. பா.ஜனதா அந்த 17 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை அமைத்தது. அந்த 17 பேருக்கும் மந்திரி பதவி வழங்கியுள்ளனர். இதை அரசு என்று அழைக்க முடியுமா?

மாநில கட்சியால் தான் மாநிலத்தின் உரிமைகள் காப்பாற்ற முடியும். வருகிற 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) கட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். 

தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் மாநில கட்சிகள் தான் ஆட்சி செய்கின்றன. அங்கு மாநில கட்சிகள் சிறப்பான முறையில் ஆட்சி நடத்துகின்றன. இதை பார்த்து கர்நாடக மக்கள் மாநில கட்சியான ஜனதா தளம் (எஸ்) கட்சியை ஆதரிக்க வேண்டும்.”

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

மேலும் செய்திகள்