செல்போன் உளவு பிரச்சினையால் மக்களவை 2-வது நாளாக முடங்கியது; நாளை வரை ஒத்திவைப்பு

செல்போன்கள் உளவு பார்க்கப்படும் பிரச்சினையால் நாடாளுமன்ற மக்களவை 2-வது நாளாக முடங்கியது. சபை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் சுமுகநிலை திரும்பியது.

Update: 2021-07-21 01:41 GMT
புதுடெல்லி, 

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. குழுமம் உருவாக்கிய ‘பெகாசஸ்’ உளவு மென்பொருளை பயன்படுத்தி, இந்தியாவில் 300 முக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

உளவு பார்க்க தேர்வு செய்யப்பட்ட செல்போன் எண்களில், மத்திய மந்திரிகள் அஸ்வினி வைஷ்ணவ், பிரகலாத் சிங் படேல், முன்னாள் தேர்தல் கமிஷனர் அசோக் லவாசா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஆகியோரின் எண்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நீக்க வேண்டும் என்றும், பிரதமர் மோடி மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நேற்று முன்தினம் முதல் நாளிலேயே நாடாளுமன்றம் முடங்கியது.

இந்தநிலையில், நேற்று நாடாளுமன்ற மக்களவை காலை 11 மணிக்கு கூடியது. அப்போது, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள், செல்போன் உளவு பார்த்த விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், பதாகைகளை ஏந்தி இருந்தனர்.

இதனால், 5 நிமிடத்திலேயே சபை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு சபை மீண்டும் கூடியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். ஒரு பதாகையில், ‘‘மக்கள் வேலையின்றி தவிக்கும்போது, மத்திய அரசு உளவு பணியில் ஆர்வமாக இருப்பதா?’’ என்று எழுதப்பட்டு இருந்தது.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள், தங்கள் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் பெயரும் உளவு பட்டியலில் இருப்பதாக குற்றம் சாட்டினர். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி.க்கள், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி கூச்சலிட்டனர்.

அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா, ‘‘உறுப்பினர்கள் எழுப்பும் எல்லா பிரச்சினைகளையும் விவாதிக்க வாய்ப்பு தருகிறேன். மத்திய அரசு பதிலளிக்க தயாராக இருக்கிறது. எனவே, இருக்கைக்கு திரும்பி செல்லுங்கள்’’ என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேட்காமல் அமளியை தொடர்ந்தனர். இதனால், சபையை நாள் முழுவதும் சபாநாயகர் ஒத்திவைத்தார். இன்று (புதன்கிழமை) பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை என்பதால், நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிவரை சபை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை நேற்று கூடியவுடன், உளவு விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி அமளி நடந்ததால், சபை அடுத்தடுத்து 2 தடவை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர், எதிர்க்கட்சி தலைவர்களான ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ், டெரிக் ஓ பிரையன், திருச்சி சிவா உள்ளிட்டோருடன் அவை முன்னவர் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தினர். சபையை சுமுகமாக நடத்த ஒத்துழைக்குமாறு கோரினார்.

பின்னர், அவர்களையும் அழைத்துக்கொண்டு சபை தலைவர் வெங்கையா நாயுடுவை பியூஷ் கோயல் சந்தித்தார். துணை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண்சிங், நாடாளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி முரளீதரன் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

சபை முடங்குவது பற்றி கவலை தெரிவித்த வெங்கையா நாயுடு, சபை சுமுகமாக நடந்தால்தான் எல்லா முக்கிய பிரச்சினைகள் பற்றியும் விவாதிக்க முடியும் என்று கூறினார்.

இந்த சந்திப்பில், கொரோனா நிலவரம் குறித்து பகல் 1 மணி முதல் மாலை 5 மணிவரை விவாதம் நடத்துவது என்றும், அதற்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி பதில் அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பகல் 1 மணியில் இருந்து சபையில் சுமுகநிலை திரும்பியது.

மேலும் செய்திகள்