ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்களின் உறவினர்கள் மத்திய அரசை கோர்ட்டுக்கு இழுக்க வேண்டும் -சஞ்சய் ராவத் எம்.பி.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்களின் உறவினர்கள் மத்திய அரசை கோர்ட்டுக்கு இழுக்க வேண்டும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.

Update: 2021-07-21 23:24 GMT
கோப்பு படம்
மும்பை, 

நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொரோனா 2-வது அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏராளமான நோயாளிகள் உயிரிழந்தது குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தனர். 
இதற்கு நேற்று எழுத்து பூர்வமாக பதில் அளித்த சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன்பவார், “ கொரோனா 2-வது அலையில் நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை” என கூறினார். 
மேலும் அவர், “முதல் அலையின்போது சராசரியாக 3,095 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்பட்ட நிலையில் 2-வது அலையில் 9 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்பட்டது. ஆனாலும், ஆக்சிஜன் சப்ளையை சீராக மாநிலங்களுக்கு மத்திய அரசு பிரித்து வழங்கியது” என கூறியிருந்தார்.
ஆனால் மத்திய மந்திரியின் இந்த பதிலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 
இந்த நிலையில் நேற்று சிவசேனா கட்சியின் முத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ரஞ்சய் ராவத்திடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். 
இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

கொரோனா 2-வது அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல மாநிலங்களில் ஏராளமானவர்கள் இறந்துள்ளனர். ஆனால் மத்திய அரசு உண்மையில் இருந்து ஓடி ஒளிய முயற்சி செய்கிறது. 
இது பெகாசசின்(இஸ்ரேலின் உளவுதளம்) விளைவாக இருக்கலாம் என எனக்கு தோற்றுகிறது. 

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக  இறந்தவர்களின் உறவினர்கள் இந்த பிரச்சினையை கோர்ட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும். மத்திய அரசை கோர்ட்டுக்கு இழுக்க வேண்டும். 
ஆக்சிஜன் சப்ளை இல்லாததால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கூறிய பதிலை நம்புகிறார்களா என்று கண்டுபிடிக்க வேண்டும். 
இவ்வாறு அவர்கூறினார். 

மேலும் செய்திகள்