கனமழை எதிரொலி; விகார் ஏரியைத் தொடர்ந்து மும்பைக்கு குடிநீர் வழங்கும் துல்சி ஏரியும் நிரம்பியது

கனமழை காரணமாக விகார் ஏரி நிரம்பியதையடுத்து தற்போது மும்பைக்கு குடிநீர் வழங்கும் துல்சி ஏரியும் நிரம்பியுள்ளது.

Update: 2021-07-22 02:57 GMT
மும்பை,

மும்பைக்கு குடிநீர் வழங்கும் 7 ஏரிகளில் துல்சி ஏரியும் ஒன்றாகும். கடந்த சில தினங்களாக மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக விகார் ஏரி அண்மையில் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று மும்பை சஞ்சய்காந்தி பூங்காவில் உள்ள துல்சி ஏரியும் தனது முழு கொள்ளளவான 8 ஆயிரத்து 46 மில்லியன் லிட்டர் அளவை எட்டியது. இதனால் உபரி நீர் ஏரியில் இருந்து வெளியேறியது.

இந்த 2 ஏரிகளும் மும்பை சஞ்சய்காந்தி பூங்காவின் உள்புறமாக அமைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற ஏரிகளான வைத்தர்னா, மேல்வைத்தர்னா, பாட்சா, மோடக்சாகர் மற்றும் தான்சா ஆகிய 5 ஏரிகள் முழு கொள்ளளவை இன்னும் எட்டவில்லை. வருகிற நாட்களில் கனமழை தொடரும் பட்சத்தில் இந்த ஏரிகளும் நிரம்ப வாய்ப்பு இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்