மராட்டியத்தில் துணிகர சம்பவம்: ஏ.டி.எம். எந்திரத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்து ரூ.30 லட்சம் கொள்ளை

மராட்டியத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்து ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட துணிகர சம்பவம் நடந்துள்ளது.

Update: 2021-07-22 03:06 GMT
மும்பை,

வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவமும், பணத்துடன் அந்த எந்திரத்தை அலேக்காக பெயர்த்து எடுத்து செல்லும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த நிலையில் ஏ.டி.எம். எந்திரத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்து கொள்ளையடித்த துணிகர சம்பவம் மராட்டியத்தில் நடந்து உள்ளது.

அந்த மாநிலத்தின் புனே அருகே உள்ள பிம்ப்ரி சிஞ்ச்வாட், சகான் எம்.ஐ.டி.சி. தொழிற்பேட்டை பாம்பொலியில் வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்திற்கு 2 ஆசாமிகள் வந்துள்ளனர். அவர்கள் அதிரடியாக ஏ.டி.எம். எந்திரத்துக்கு வெடிகுண்டு வைத்தனர். இதில் அந்த எந்திரம் வெடித்து சிதறியது. இதையடுத்து ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து சிதறிய பணத்தை அள்ளி சென்றுள்ளனர்.

ஏ.டி.எம். எந்திரம் வெடித்து சிதறி கிடந்த காட்சியை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது அது வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது உறுதியானது. கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, 2 ஆசாமிகளின் உருவம் அதில் பதிவாகி இருந்தது.

அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.28 லட்சம் முதல் 30 லட்சம் வரை பணம் இருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த பணத்தை கொள்ளையர்கள் 2 பேரும் அள்ளிச்சென்று உள்ளனர்.

ஏ.டி.எம். எந்திரத்தை வெடிக்க செய்ய டி.என்.டி. டெட்டனேட்டர் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். அவர்கள் மாதிரியை சேகரித்து சென்றனர்.

ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளையடிக்க வெடிகுண்டை பயன்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கொள்ளை ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்