கர்நாடகத்தில் மழை-வெள்ளம் பாதித்த பகுதிகளை எடியூரப்பா இன்று பார்வையிடுகிறார்

கனமழையால் பாதித்துள்ள பெலகாவி உள்ளிட்ட மாவட்டங்களை முதல்-மந்திரி எடியூரப்பா இன்று (ஞாயிற்றுக்கிழமை) பார்வையிட உள்ளார். மேலும் நிவாரண பணிகளை தீவிரப்படுத்தும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு, எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-07-24 18:59 GMT
தென்மேற்கு பருவமழை
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக பெலகாவி, பாகல்கோட்டை, யாதகிரி, ஹாவேரி, கொப்பல், தட்சிண கன்னடா, உத்தரகன்னடா, குடகு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அந்த 15 மாவட்டங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.பெலகாவி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அங்கு ஏராளமான கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளிக்கின்றன. கிராம மக்களை மீட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

10 ஆயிரம் பேர் மீட்பு
இந்த பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு படைவீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கனமழை காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கனமழையால் பெரித்தும் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கனமழை காரணமாக கர்நாடகத்தில் உள்ள அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.பெலகாவி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதன்பிறகு மழையின் அளவு படிப்பாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெலகாவி கலெக்டருடன் பேச்சு
இந்த நிலையில், பெலகாவி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட பொறுப்பு மந்திரியை நேற்று காலையில் முதல்-மந்திரி எடியூரப்பா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண பணிகளை தீவிரமாக மேற்கொள்ளும்படி பெலகாவி கலெக்டருக்கு, அவருக்கு உத்தரவிட்டார். மேலும் மழை, வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை உடனடியாக மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும்படியும் கலெக்டருக்கு, முதல்-மந்திரி 
எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.அதே நேரத்தில் பெலகாவி மாவட்ட கலெக்டருடன், காணொலி காட்சி மூலமாகவும் முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும், இதற்கு தேவையான உதவிகளை அரசு செய்து கொடுக்கும் என்றும் மாவட்ட கலெக்டரிடம் எடியூரப்பா தெரிவித்துள்ளார். நிவாரண பணிகளை தாமதம் இன்றி மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

ெபாறுப்பு மந்திரிகளுக்கு உத்தரவு
இதுபோல், மழையால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற மாவட்டங்களின் கலெக்டர்களுடனும் முதல்-மந்திரி எடியூரப்பா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். நிவாரண பணிகளை வேகமாக மேற்கொள்ளவும், மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாமல் இருக்க முன் எச்சரிக்கைநடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.குறிப்பாக மாவட்ட பொறுப்பு மந்திரிகள், சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும், மழை நிவாரண பணிகளை மேற்கொள்ளும்படியும் முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எடியூரப்பா பார்வையிடுகிறார்
இந்த நிலையில், கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பெலகாவி மாவட்டத்தை முதல்-மந்திரி எடியூரப்பா இன்று (ஞாயிற்றுக்கிழமை) பார்வையிட உள்ளார்.அவருடன் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக்கும் மழை பாதித்த பகுதிகளை பார்வையிட இருக்கிறார். பெலகாவி தவிர மழையால பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மற்ற மாவட்டங்களுக்கு சென்று பார்வையிடவும் முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகள்