முதல்-மந்திரி மாற்றத்தால் கர்நாடகத்தில் வளர்ச்சி பணிகள் முடங்கி உள்ளன - ஜி.டி.தேவேகவுடா பேட்டி
முதல்-மந்திரி மாற்றத்தால் கர்நாடகத்தில் வளர்ச்சி பணிகள் முடங்கி உள்ளன என்று முன்னாள் மந்திரி ஜி.டி.தேவேகவுடா கூறினார்.;
மைசூரு,
மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் மந்திரியுமான ஜி.டி.தேவேகவுடா மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எடியூரப்பாவிடம் இருந்து பா.ஜனதா மேலிடம் முதல்-மந்திரி பதவியை பறித்துள்ளது. அது பா.ஜனதா கட்சியின் தனிப்பட்ட விஷயம். அதைப்பற்றி நான் இங்கு பேசமாட்டேன். மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை அரசு உடனடியாக செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு முதல்-மந்திரி மாற்றம் மற்றும் மந்திரிசபை மாற்றத்தில் பா.ஜனதா அரசு கவனம் செலுத்துவதை கண்டிக்கிறேன். மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் முடங்கி உள்ளன. அதனால் உடனே மந்திரிகளை நியமித்து நிவாரண பணிகளை அரசு முடுக்கிவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.