கேரளாவில் வேகமாக பரவும் பறவை காய்ச்சல்
கேரளாவில் ஆலப்புழை, கோட்டயம் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.;
திருவனந்தபுரம்,
கேரளாவில் ஆலப்புழை, கோட்டயம் மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் கோழி, வாத்து போன்றவை இறைச்சி மற்றும் முட்டைக்காக பண்ணைகளில் அதிகமாக வளர்க்கப்படுகிறது. இந்த பண்ணைகளில் வளர்த்து வந்த கோழிகள், வாத்துகள் அடிக்கடி செத்து மடிந்தன. இதை தொடர்ந்து இதன் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய் கண்டறியும் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு நடத்தப்பட்ட மாதிரி சோதனையில் பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி ஆலப்புழை மாவட்டத்தில் நெடுமுடி, செருத்தானா, கருவட்டா, கார்த்திகப்பள்ளி, அம்பலப்புழா தெற்கு, புன்னப்ரா தெற்கு, தகழி மற்றும் புறக்காடு பஞ்சாயத்துகளில் இந்த நோய் பதிவாகியுள்ளது. இதில் நெடுமுடியில் கோழிகளுக்கும், பிற பஞ்சாயத்துகளில் வாத்துகளுக்கும் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபோல் கோட்டயம் மாவட்டத்தில் குருபந்தரா, மஞ்சூர், கல்லுபுரக்கல் மற்றும் வேலூர் வார்டுகளில் இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு, கோழிகள் மற்றும் காடைகளில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து உடனடி தடுப்பு நடவடிக்கைகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை உத்தரவிட்டது. அதன்படி பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் கோழி, காடை இறைச்சி, முட்டை ஆகியவை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், வாத்துகள் மற்றும் காடைகளை மொத்தமாக அழிக்க கால்நடை பராமரிப்புத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.