பிரதமர் மோடியுடன் கர்நாடக முதல் மந்திரி இன்று சந்திப்பு

கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்திக்க இருக்கிறார்.

Update: 2021-07-30 02:35 GMT


புதுடெல்லி,

கர்நாடக முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா வயது மூப்பு காரணமாக தனது பதவியை கடந்த 26ந்தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை நேற்று முன்தினம் பதவி ஏற்றார். எடியூரப்பாவின் தீவிரமான ஆதரவாளரான அவர் நேற்று உத்தரகன்னடா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் பிரதமர் நேரம் ஒதுக்கியதும் டெல்லி செல்ல திட்டமிட்டு இருப்பதாக பதவி ஏற்றதும் பசவராஜ் பொம்மை கூறினார். பிரதமரை நேரில் சந்திக்க பசவராஜ் பொம்மைக்கு நேரம் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் பசவராஜ் பொம்மை இன்று டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோரை நேரில் சந்தித்து பேசுகிறார்.  தன்னை முதல்-மந்திரியாக நியமனம் செய்ததற்காக அவர்களுக்கு பசவராஜ் பொம்மை நன்றி தெரிவிக்கிறார்.

அதன் பிறகு ஜே.பி.நட்டா, அமித்ஷா, கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் ஆகியோருடன் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்க இருக்கிறார். முதல் கட்டமாக 25 மந்திரிகள் பதவி ஏற்க இருப்பதாகவும், அந்த 25 பேர்களின் பெயர் பட்டியலுக்கு பா.ஜனதா மேலிடம் அனுமதி வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

எனினும், எடியூரப்பா மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த ஜெகதீஷ்ஷெட்டர், ஈசுவரப்பா, உமேஷ்கட்டி, எம்.டி.பி.நாகராஜ், ஆர்.சங்கர், நாராயணகவுடா, பி.சி.பட்டீல், சிவராம் ஹெப்பார், சுரேஷ்குமார், ஸ்ரீமந்த் பட்டீல் உள்ளிட்ட 15 பேருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்றும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்