பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்க தயார்: நிர்மலா சீதாராமன்

பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அரசு தயாராக இருப்பதாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Update: 2021-08-12 20:23 GMT
கொரோனாவின் தாக்கம்
ஒட்டுமொத்த உலகையும் புரட்டிப்போட்ட கொரோனா தொற்று சுகாதார கட்டமைப்புகளை சீரழித்ததுடன், உலக நாடுகளின் பொருளாதாரத்திலும் சேதாரங்களை ஏற்படுத்தி விட்டது.நூற்றாண்டு காணாத இந்த பேரிடரின் தாக்குதலுக்கு இந்திய பொருளாதாரமும் தப்பவில்லை. தொற்றை கட்டுப்படுத்துவதற்காக போடப்பட்ட பொது முடக்கம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, பொருளாதார வளர்ச்சியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி விட்டது.

தொழில்துறை கூட்டம்
எனினும் வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அரசு தயாராக இருப்பதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இந்திய தொழில்துறையின் வருடாந்திர கூட்டத்தில் நேற்று உரையாற்றிய அவர், இது தொடர்பாக கூறியதாவது:-

அன்னிய செலாவணி உயர்வு
கொரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகளை மாநிலங்கள் நீக்கிய பின், பொருளாதாரம் மிதமான வளர்ச்சியில் உள்ளதுடன், மீட்டுருவாக்கம் நடைபெறுவதற்கான அறிகுறிகளும் காணப்படுகின்றன.இந்த நிதியாண்டுக்கான அன்னிய நேரடி முதலீடு 37 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. மேலும் ஜூலை மாத நிலவரப்படி அன்னிய செலாவணி கையிருப்பும் 620 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்து இருக்கிறது.

சீர்திருத்தங்களில் உறுதி
கொரோனா தொற்று காலத்திலும் சீர்திருத்தங்கள் மீதான உறுதிப்பாட்டை மோடி அரசு வெளிப்படுத்தியது. குறிப்பாக வேளாண் சீர்திருத்தம் மற்றும் தொழிலாளர் சீர்திருத்தம் போன்றவற்றை கடந்த ஆண்டு அரசு மேற்கொண்டது. அந்தவகையில் பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டவும், ஆதரவு அளிக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அரசு தயாராக இருக்கிறது.இந்த பொருளாதாரத்தில் முதலீடு செய்யவும், முன்னோக்கி செல்லவும் தொழில்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

மேலும் செய்திகள்