நடிகைகள் போதைப்பொருட்கள் பயன்படுத்திய வழக்கு: மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் கமல்பந்த் பாராட்டு

போதைப்பொருள் வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வேகமாகவும், நேர்மையாகவும் விசாரணை நடத்தியதாக போலீஸ் கமிஷனர் கமல்பந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2021-08-24 18:22 GMT
பெங்களூரு,

கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைமுடியை சோதனை செய்து போதைப்பொருள் பயன்பாட்டை கண்டறியும் நவீன முறையை பயன்படுத்தி, இதனை போலீசார் உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

“கன்னட திரை உலகினர் போதைப்பொருள் பயன்படுத்தியது குறித்த வழக்கை விசாரித்த, மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆதாரங்களை கஷ்டப்பட்டு திரட்டினர். அவர்களின் உழைப்பு தற்போது கிடைத்து உள்ள ஆய்வு அறிக்கை மூலம் வெளியாகி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 

இந்த வழக்கு குறித்து நான் அதிகம் கூற முடியாது. தடய அறிவியல் அறிக்கை நடிகைகள் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதை உறுதி செய்து உள்ளது. இந்த வழக்கில் வேகமாகவும், நேர்மையாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களுக்கு தற்போது வெற்றி கிடைத்து உள்ளது.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்