2022- டிசம்பர் வரை வீட்டிலிருந்து வேலை: ஐடி நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு அறிவுறுத்தல்

2022 டிசம்பர் வரை வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதியை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என ஐடி நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

Update: 2021-08-25 05:41 GMT
பெங்களூரு,

கொரோனா பெருந்தொற்று வைரஸ் பரவலால் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதும் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணி புரியும் வசதியை ஊழியர்களுக்கு வழங்கின. தற்போது கொரோனா 2-வது அலை பரவல் வேகமாக சரிந்து வருவதால், மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பணி புரியும் நடைமுறையை மெல்ல மெல்ல பல்வேறு நிறுவனங்களும் தொடங்கி வருகின்றன. 

இந்த நிலையில், கர்நாடகாவில் அடுத்த ஆண்டு இறுதி வரை வீட்டில் இருந்தே பணி புரியும் வசதியை ஊழியர்களுக்கு ஐடி நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அம்மாநில அரசு விடுத்துள்ளது. 

கர்நாடக அரசின் தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான கூடுதல் முதன்மை செயலாளர் ரமணா ரெட்டி பெங்களூருவில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ பெங்களூருவில் கிருஷ்ணராஜபுரம் சில்க் போர்ட் சாலையில் அடுத்த ஓராண்டுக்கு மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் 19 கிமீ நீளமுள்ள சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த பகுதியில் ஐடி நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன.

இதனால், ஐடி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டால்  கடும் போக்குவரத்து நெரிசல் நாள் முழுவதும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வரும் 2022ம் ஆண்டு டிசம்பர் வரை வீட்டில் இருந்தவாறு பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என அரசு சார்பில் நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்ப‌ப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை ஏற்றுக்கொள்வதாக 50 சதவீத நிறுவனங்கள் அரசுக்கு பதில் அனுப்பியுள்ளன” என்றார். 

மேலும் செய்திகள்