அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை; மாநில அரசின் உரிமையை ஆக்கிரமிக்கும் முயற்சி: சரத்பவார்

மராட்டிய தலைவர்கள் மீது அமலாக்கத்துறை மூலம் எடுக்கப்படும் நடவடிக்கை மாநில அரசின் உரிமையை ஆக்கிரமிக்கும் முயற்சி என்று சரத்பவார் குற்றம்சாட்டினார்.

Update: 2021-09-07 20:12 GMT
அமலாக்கத்துறை நடவடிக்கை
மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் சிலர் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆக்கிரமிக்கும் முயற்சி
மராட்டியத்தில் அமலாக்கத்துறையின் நடவடிக்கை முன் எப்போதும் இதுபோன்று இருந்ததில்லை. ஏக்நாத் கட்சே (தேசியவாத காங்கிரஸ்) மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மற்றொருபுறம் முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் (தேசியவாத காங்கிரஸ்) மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாவ்னா கவாலி (சிவசேனா எம்.பி.) மீதும் நடவடிக்கை பாய்கிறது.இதையெல்லாம் பார்க்கும்போது மாநில அரசின் உரிமையை ஆக்கிரமிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது. மேலும் மத்திய ஏஜென்சிகளை கருவியாக வைத்து, எதிர்க்கட்சிகளின் தைரியத்தை குறைக்க நடக்கும் முயற்சியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மோகன் பகவத் கருத்துக்கு பதில்
இந்துக்களும், முஸ்லிம்களும் ஒரே மரபில் இருந்து வந்தவர்கள் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியது பற்றி கேட்டதற்கு பதிலளித்த சரத்பவார், ‘‘இது எனது அறிவுக்கு எட்டிய கூடுதல் தகவல்’’ என்று கிண்டலாக கூறினார்.

மேலும் செய்திகள்