கர்நாடக சட்டசபை இன்று கூடுகிறது: சபாநாயகர் காகேரி

கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. சட்டசபைக்கு வரும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று சபாநாயகர் காகேரி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-09-12 18:38 GMT
மாணவி கற்பழிப்பு
கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூலை மாதம் கூட்டப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக சுமார் 2 மாதங்கள் தாமதமாக இந்த கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) பெங்களூரு விதான சவுதாவில் தொடங்குகிறது. கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவர் பதவிக்கு வந்த பிறகு முதல் முறையாக சட்டசபை பெங்களூருவில் கூடுகிறது.அதனால் இந்த கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் 18 சட்ட மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. 10 வேலை நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கியமான பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக மைசூருவில் நடைபெற்ற கல்லூரி மாணவி கற்பழிப்பு சம்பவம், விலைவாசி உயர்வு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரச்சினை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

காரசாரமான விவாதங்கள்
சட்டசபையில் முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பாவும், எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் சித்தராமையாவும் பலம் வாய்ந்த தலைவர்களாக இருந்தனர். அதனால் சட்டசபையில் சில முக்கியமான பிரச்சினைகளில் காரசாரமான விவாதங்கள் நடைபெறும். அதனை அனைவரும் உற்று நோக்குவார்கள். ஆனால் தற்போது எடியூரப்பா முதல்-மந்திரி பதவியில் இல்லாத நிலையில், சட்டசபை கூட்ட விவாதங்கள் சூடாக நடைபெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.பசவராஜ் பொம்மை ஏற்கனவே சட்டசபை விவகாரத்துறை மந்திரியாக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசுக்கு எதிராக எழுப்பப்பட்ட முக்கியமான பிரச்சினைகளில் அவரே பதிலளித்து சமாளித்தார். அதனால் எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளை பசவராஜ் பொம்மை சரியான முறையில் கையாளுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போலீஸ் பாதுகாப்பு
சட்டசபை கூடுவதையொட்டி விதான சவுதாவை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க விதான சவுதாவை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படும் என்று சபாநாயகர் காகேரி ஏற்கனவே கூறியுள்ளார்.

அதனால் சட்டசபைக்கு வரும் உறுப்பினர்கள், அதிகாரிகளின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். மேலும் சட்டசபைக்கு வரும் எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள், அதிகாரிகள் என அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முறை சபை நிகழ்வுகளை காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்