மும்பையில் கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருடன் தேசிய மகளிர் ஆணைய குழுவினர் சந்திப்பு

கற்பழித்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை தேசிய மகளிர் ஆணைய குழுவினர் சந்தித்து பேசினர்.

Update: 2021-09-12 19:40 GMT
பெண் கற்பழித்து கொலை
மும்பை சாக்கிநாக்கா பகுதியில் 34 வயது பெண் சாலையோரம் வசித்து வந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் அதே பகுதியில் சாலையோரம் வாழ்ந்து வந்த மோகன் சவுகான்(வயது45) என்ற டிரைவர், நிறுத்தப்பட்டு இருந்த டெம்போவில் பெண்ணை கற்பழித்து, கம்பியால் கொடூரமாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த பெண் நினைவு திரும்பாமலே நேற்று முன்தினம் காலை ராஜவாடி ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். டெல்லி நிர்பயா போல மும்பையில் நடந்த இந்த பயங்கர சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உள்பட பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டிரைவர் மோகன் சவுகானை கைது செய்தனர். அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கை போலீஸ் உதவி கமிஷனர் ஜோட்சனா ராசம் தலைமையிலான சிறப்பு புலனாய்பு பிரிவு போலீசார் விசாரிப்பார்கள் என கமிஷனர் ஹேமந்த் நக்ராலே கூறியுள்ளார்.

குடும்பத்தினருடன் சந்திப்பு
இந்தநிலையில் தேசிய மகளிர் ஆணைய குழுவினர் 4 முதல் 5 பேர் சாக்கிநாக்கா பகுதியில் உள்ள பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து பேசினர். பின்னர் அவர்கள் குற்றச்செயல் நடந்த டெம்போவில் ஆய்வு செய்தனர். பின்னர் சாக்கிநாக்கா போலீஸ் நிலையம் சென்று, வழக்குப்பற்றிய விவரங்களை சேகரித்தனர்.

இதேபோல அவர்கள் பெண் 36 மணி நேரம் சிகிச்சை பெற்ற ராஜவாடி ஆஸ்பத்திரிக்கும் சென்றனர். அங்கு அவர்கள் பெண்ணுக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்ட விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். தொடர்ந்து மகளிர் ஆணையத்தினர் மாநில டி.ஜி.பி.யையும் சந்தித்து பேச உள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும் செய்திகள்