மாநிலத்தின் பொன்விழாவையொட்டி இமாசலபிரதேச சட்டசபை சிறப்பு கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

இமாசலபிரதேசம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடந்த சட்டசபை சிறப்பு கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்றார்.

Update: 2021-09-17 21:07 GMT
சிம்லா,

இமாசலபிரதேச மாநிலம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் முடிவடைந்தன. இதையொட்டி, நேற்று அம்மாநில சட்டசபையின் ஒரு மணி நேர சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

அதில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர், மத்திய மந்திரி அனுராக் தாக்குர், முன்னாள் முதல்-மந்திரி பிரேம்குமார் துமல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க் களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஜனாதிபதி பேசியதாவது:-

இமாசலபிரதேசத்துக்கு முதல்முறையாக 1974-ம் ஆண்டு வந்தேன். அதன் இயற்கை அழகில் மனதை பறிகொடுத்தேன். அப்போதிருந்து அவ்வப்போது வந்து செல்கிறேன். மாநிலத்தின் இயற்கை அழகை பாதுகாக்க விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும்.

ராணுவத்தில் இந்த மாநிலத்தை சேர்ந்த 1 லட்சத்து 20 ஆயிரம் வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள். முப்படை தலைவர் என்ற முறையில் அவர்களை வணங்குகிறேன். பரம்வீர் சக்ரா விருதை முதல்முதலில் பெற்ற மேஜர் சோம்நாத் சர்மா, இமாசலபிரதேசத்தை சேர்ந்தவர்தான்.

கடந்த 2014-ம் ஆண்டிலேயே காகிதமில்லா சட்டசபை நடத்தி, மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இமாசலபிரதேசம் விளங்குகிறது. நிதி ஆயோக் அமைப்பின் 2020-2021 அறிக்கைப்படி, மாநிலங்களிடையே 2-வது இடத்தை பிடித்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்