சாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் தேவை: லாலு பிரசாத் யாதவ் உறுதி

சாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் தேவை எனவும், இடஒதுக்கீட்டில் தேவைப்பட்டால் 50 சதவீதத்தை மேலும் அதிகரிக்கலாம் என்று லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

Update: 2021-09-22 19:36 GMT
கோப்புப்படம்
பாட்னா, 

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு முனைகளில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் திட்டம் இல்லை என மத்திய அரசு ஏற்கனவே கூறியிருந்தது.

எனினும் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேலும் தனது மாநிலத்தை சேர்ந்த அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடியை சந்தித்து சாதிவாரி கணக்கெடுப்பை அவர் வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் பீகாரின் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவும், சாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் தேவை என கூறியுள்ளார்.

பாட்னாவில் நேற்று நடந்த கட்சியின் பயிற்சி முகாம் ஒன்றில், டெல்லியில் இருந்தவாறே காணொலி காட்சி மூலம் பங்கேற்று அவர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை நான்தான் முதன் முதலில் எழுப்பினேன். இந்த கோரிக்கையை நாடாளுமன்றத்திலும் எழுப்பியுள்ளேன். எஸ்.சி., எஸ்.டி. உள்பட அனைத்து பிரிவினரின் நலனுக்காகவே எனது கோரிக்கை உள்ளது. சுதந்திரத்துக்கு முன்னர் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அடிப்படையில்தான் தற்போதை இடஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

ஆனால் தற்போது இருக்கும் இடஒதுக்கீடு போதுமானது அல்ல. இது கூட எப்போதாவதுதான் பின்பற்றப்படுகிறது. இதனால் மிகப்பெரிய பின்னடைவு காணப்படுகிறது. எனவே பல்வேறு சமூகங்களை சேர்ந்த மக்கள் தொகை குறித்த புதிய கணக்கெடுப்பு வேண்டும். இதற்காக புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன் அடிப்படையில் மக்கள் தங்களுக்கான ஒதுக்கீட்டை பெறட்டும்.

அதற்கு தற்போதைய 50 சதவீத அதிகபட்ச இடஒதுக்கீடு தடையாக இருக்குமானால், அதையும் உடைக்க வேண்டும். மொத்த மக்கள் தொகையில் இதர பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் அதிகமாக இருந்தால், 50 சதவீத இட ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம்” என்று லாலு பிரசாத் யாதவ் கூறினார்.

மேலும் செய்திகள்