திருப்பதியில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக பக்தர்கள் கைது

இலவச தரிசன டோக்கன்களை நேரடியாக வழங்க வலியுறுத்தி, திருப்பதி சீனிவாசம் தங்கும் விடுதி எதிரே ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக பக்தர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-09-24 18:04 GMT
இலவச தரிசன டோக்கன்கள்
திருப்பதி, திருமலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதி சீனிவாசம் தங்கும் விடுதியில் இலவச தரிசனத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் டோக்கன்கன் வழங்கப்பட்டது. அந்த டோக்கன்களின் எண்ணிக்கையை உயர்த்தி ஓரிரு நாட்களுக்கு முன்பு 8 ஆயிரமாக வழங்கியது. அதை பெறுவதற்காக பக்தர்கள் வரிசையில் முண்டியடித்துச் சென்றதால் அவர்களுக்கிடையே அடிக்கடி தள்ளு முள்ளு ஏற்பட்டு வந்தது. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டதால் இலவச தரிசன டோக்கன்களை ஆன்லைனில் வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது.அதன்படி, நேற்று சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு முன்தினம் ஆன்லைனில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன. நாளை (சனிக்கிழமை) சாமி தரிசனம் செய்கின்ற பக்தர்களுக்கு ஆன்லைனில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன.

15 பேர் கைது
இதற்கிடையே, திருப்பதி சீனிவாசம் தங்கும் விடுதியில் இலவச தரிசன டோக்கன்கள் நேரடியாக வழங்கப்படுவதாக கருதி நேற்று ஏராளமான தமிழக பக்தர்கள் திருப்பதிக்கு வந்தனர். சீனிவாசம் தங்கும் விடுதியில் நேரடியாக இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படாததால் ஆத்திரம் அடைந்த தமிழக பக்தர்கள் 15-க்கும் மேற்பட்டோர் சீனிவாசம் தங்கும் விடுதி எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் பைபாஸ் சாலையில் அமர்ந்து பக்தர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட பக்தர்கள் இலவச தரிசன டோக்கன்களை நேரடியாக வழங்க வேண்டும், என வலியுறுத்தினர்.

தகவல் அறிந்ததும் திருப்பதி போலீசார் விரைந்து வந்து, பக்தர்களிடம் சாலை மறியலை கைவிடும்படி கூறினர். ஆனால் பக்தர்கள் சாலை மறியலை கைவிடாமல் போலீசாருடன் கடும் வாக்கு வாதம் செய்தனர். அதை தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்ட 15 தமிழக பக்தர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் பக்தர்களை விடுவித்தனர்.

மேலும் செய்திகள்