முல்லைப்பெரியாறு அணை வழக்கில் அறிக்கை: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அவகாசம்

முல்லைப்பெரியாறு அணை வழக்கில் உத்தரவிட்டபடி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அவகாசம் அளித்துள்ளது.

Update: 2021-10-08 20:23 GMT
முல்லைப் பெரியாறு அணை

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு பணியை மேற்பார்வைக்குழு மட்டுமே மேற்கொள்ள உத்தரவிடக்கோரிய ஜோ ஜோசப் மனு, கேரளாவுக்கும், தமிழகத்துக்கும் இடையிலான முல்லைப் பெரியாறு அணையின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி கொச்சியை சேர்ந்த சுரக்ஷா அறக்கட்டளை தாக்கல் செய்த மேல்முறையீடு மனு ஆகியற்றை இணைத்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

இந்த வழக்கில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய அணையின் நீர்மட்டத்தை மாதந்தோறும் வைத்துக்கொள்வது குறித்த அட்டவணை, அணையின் மதகுகளை திறப்பது குறித்த அட்டவணை ஆகியவற்றை மத்திய நீர்வள ஆணையத்தின்கீழ் செயல்படும் அணை கண்காணிப்பு குழு 4 வாரங்களுக்குள் உருவாக்கி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த மார்ச் 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

அவகாசம்

இந்நிலையில், நேற்று மீண்டும் நடைபெற்ற விசாரணையின் போது, கடந்த உத்தரவின்படி, அறிக்கை சமர்ப்பிக்க மேலும் ஒரு வாரம் அவகாசம் தேவை என மத்திய நீர்வள ஆணையத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி கோரிக்கை விடுத்தார். அதை ஏற்ற நீதிபதிகள், அக்டோபர் 21-ந் தேதி அல்லது அதற்கு முன் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை அக்டோபர் 25-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்