பஞ்சாப் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி குருத்வாராவில் வழிபாடு
பஞ்சாப் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி பாகிஸ்தான் குருத்வாராவில் வழிபாடு செய்தார்.;
லாகூர்,
பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில்தான் சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தனது இறுதிக்காலத்தில் வாழ்ந்து மறைந்தார். அங்கு அவருடைய நினைவிடத்தின்மீது தர்பார் சாகிப் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது. இது சீக்கியர்களின் புனிதத்தலம் ஆகும். இங்கு குருநானக் பிறந்தநாளையொட்டி இந்தியா உள்பட உலகமெங்கும் உள்ள சீக்கியர்கள் சென்று வழிபாடு நடத்துவது வழக்கமான ஒன்றாகும்.
இந்த குருத்வாராவுக்கு கர்தார்பூர் சாலை வழியாக பஞ்சாப் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி, தனது குடும்பத்தினர் மற்றும் மூத்த மந்திரிகளுடன் சென்று, தர்பார் சாகிப் குருத்வாராவில் நேற்று வழிபாடு நடத்தினார்.
பஞ்சாப் பா.ஜ.க. தலைவர் அஷ்வனி சர்மா தலைமையிலான 21 உறுப்பினர்களை கொண்ட குழுவினரும் இந்த குருத்வாராவில் நேற்று வழிபாடு நடத்தினார்கள்.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து நாளை (20-ந்தேதி) தர்பார் சாகிப் குருத்வாராவுக்கு சென்று வழிபாடு நடத்த உள்ளதாக அவருடைய ஊடக ஆலோசகர் சுரீந்தர் டல்லா கூறி உள்ளார்.
கர்தார்பூர் சாலை கொரோனா தொற்றால் கடந்த 20 மாதங்களாக மூடப்பட்டிருந்து, இப்போதுதான் திறக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியே சென்று தர்பார் சாகிப் குருத்வாராவில் வழிபட விசா இன்றி பாகிஸ்தான் அனுமதிப்பது குறிப்பிடத்தக்கது.