எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு

எதிர்கட்சிகள் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-30 10:33 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் நடைபெற்றது. ஆகஸ்டு 11-ந் தேதி, கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முந்தைய நாள், மாநிலங்களவையில் வரலாறு காணாத அமளி நடந்தது. 

அப்போது, பொது காப்பீட்டு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. அதற்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போர்க்கோலம் பூண்டனர். மசோதா நகல்களை கிழித்து எறிந்தனர். மாநிலங்களவை செயலாளர், பத்திரிகையாளர்கள் அமரும் மேஜை மீது ஏறி அமளியில் ஈடுபட்டனர்.

அவர்களை கட்டுப்படுத்த சபை காவலர்கள் உள்ளே வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கும், எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு உருவானது. இதில், ஒரு பெண் காவலர் தாக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

மறுநாள் சபைக்கு வந்த சபைத்தலைவர் வெங்கையா நாயுடு கண்ணீர் விட்டு அழுதார். இரவில் தனக்கு தூக்கம் வரவில்லை என்று வேதனையுடன் கூறினார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு ஆளுங்கட்சி தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த புகார், சபை தலைவரின் பரிசீலனையில் இருந்தது. இந்தநிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. 

மாநிலங்களவையில், அதன் தலைவர் வெங்கையா நாயுடு, முந்தைய கூட்டத்தொடரில் நடந்த அமளி குறித்து வேதனையுடன் குறிப்பிட்டார். தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட   12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் 6 பேர் காங்கிரஸ் எம்.பி.க்கள். தலா 2 பேர், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள். தலா ஒருவர், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்தவர்கள்.

நாடாளுமன்றத்தில் கடும் அமளி

இந்த நிலையில், இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்.பிக்கள் இடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் புயலை கிளப்பியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.  பின்னர் மீண்டும் அவை கூடும் போதும் உறுப்பினர்கள் அமளி நீடித்தது. இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்