விவசாயிகள் உயிரிழந்த விவகாரம் : மத்திய அரசு உண்மையை மூடி மறைக்கிறது - ராகுல் காந்தி

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தில் மத்திய அரசு உண்மையை மூடி மறைக்கிறது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Update: 2021-12-03 11:43 GMT
புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்குப்  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; -

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தில் மத்திய அரசு உண்மையை மூடி மறைக்கிறது. உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். உயிரிழந்த விவசாயிகளுக்கு மத்திய அரசு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழந்ததாக எந்த தரவுகளும் இல்லை என்கிறது மத்திய அரசு.

தவறு செய்துவிட்டதாக பிரதமர் மோடியே ஒப்புக்கொள்கிறார். நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.  பிரதமர் மோடியின் தவறால் 700 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். தற்போது இந்த விவகாரத்தில் பொய் கூறுகிறீர்கள் விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த 403 பேரின் குடும்பத்தினருக்கு பஞ்சாப் அரசு 5 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. 152 பேருக்கு அரசு வேலை வழங்கியுள்ளது. அதேபோல், பிற மாநிலங்களை சேர்ந்த 100 பேரின் பட்டியலில் எங்களிடம் உள்ளது. 

ஆனால், இதுபோன்ற எந்த பட்டியலும் தங்களிடம் இல்லை என அரசு கூறுகிறது. விவசாயிகளின் போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிதி உதவி திட்ட அரசிடம் திட்டம் உள்ளதா? என பாராளுமன்றத்தில் அரசிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், இதற்கு பதிலளித்த வேளாண் அமைச்சகம் இது தொடர்பாக எந்த தரவுகளும் அரசிடம் இல்லை .ஆகவே, அதற்கான கேள்வி எழவில்லை எனக்கூறியது” இவ்வாறு பேசினார். 

மேலும் செய்திகள்