இஸ்லாம் மதத்தில் இருந்து வெளியேறுவதாக மலையாள இயக்குநர் அலி அக்பர் அறிவிப்பு

பிபின் ராவத்தின் மரணம் தொடர்பாக வெளியான செய்திகளுக்கு சிலர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக கூறி, மலையாள இயக்குநர் அலி அக்பர்இஸ்லாம் மதத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

Update: 2021-12-12 05:19 GMT
திருவனந்தபுரம், 

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி நஞ்சப்பசத்திரத்தில் ராணுவ ஹெலிகாப்டர் மரங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் வீரமரணம் அடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்த விபத்து ஏற்படுத்தியது. முப்படை தலைமைத் தளபதியின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வந்தனர். 

இதற்கிடையே, முப்படை தளபதி மரணம் குறித்து  சமூக வலைதளங்களில் வெளியான செய்திகளுக்கு சிலர் சிரிப்புஎமோஜியை (ஸ்மைலி) பதிவு செய்ததாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இந்த எமோஜியை பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக மலையாள இயக்குநர் அலி அக்பர், இஸ்லாம் மதத்தில் இருந்து தானும் தனது மனைவியும் வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அலி அக்பர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறுகையில், “ நான் இன்று முதல் முஸ்லீம் கிடையாது. இந்தியன் மட்டுமே. தேச விரோத சக்திகளுடன் நான் இனிமேலும் நிற்கப் போவது இல்லை. எனது மனைவியும் இஸ்லாம் மதத்தில் இருந்து வெளியேறுகிறார். எனது மகள்களை இந்த விவகாரத்தில் நான் நிர்பந்தப்படுத்த விரும்பவில்லை. அது அவர்களின் உரிமை சார்ந்தது” எனப்பதிவிட்டுள்ளார். 

முன்னதாக கடந்த அக்டோபர் மாதம், பாஜக மாநில செயலாளர் ஏகே நசீர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை கண்டித்து, பாஜகவில் இருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அலி அக்பர் விலகினார். எனினும், பாஜக உறுப்பினராக தொடர்ந்து நீடிப்பேன் எனவும் அலி அக்பர் கூறியிருந்தார். 

மேலும் செய்திகள்