உத்தரபிரதேசம்: ரேபரேலி எம்.எல்.ஏ. காங்கிரசில் இருந்து விலகல்

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

Update: 2022-01-20 07:22 GMT
லக்னோ,

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டுகிறது.

இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், முக்கியத்தலைவர்கள் கட்சி மாறி மாற்றுகட்சிகளில் இணைந்த வண்ணம் உள்ளனர்.

இதற்கிடையில், உத்தரபிரதேசத்தில் ரேபரேலி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக செயல்பட்டவர் அதிதி சிங். இவர் 5 முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த அகிலேஷ் சிங்கின் மகள் ஆவார்.

அதிதி சிங் காங்கிரசுக்கு எதிரான கருத்து தெரிவித்து பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததால் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பரில் காங்கிரசில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அதிதி கடந்த ஆண்டு நவம்பரில் பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் இணைந்தபோதும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகவே இருந்துவந்தார். அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகவில்லை.

இந்நிலையில், அதிதி சிங் இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். தனது விலகல் கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளார். அதிதி சிங்கை காங்கிரஸ் ஆதரவு அதிகம் நிறைந்த ரேபரேலி தொகுதியில் களமிறக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்